செப்டம்பர் 22 – கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலுள்ள ஒரு பேரங்காடியில் சோமாலியா அல்கைடா தீவிரவாதிகள் என நம்பப்படுபவர்கள் வருகையாளர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலிலும், கையெறிக் குண்டு தாக்குதலிலும் இதுவரை 39 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 150 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 24 மணி நேரத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டைத் தொடக்கிய தீவிரவாதிகளை கென்யா நாட்டு பாதுகாப்புப் படைகள் சுற்றி வளைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட்கேட் மால் (Westgate Mall) என்ற அந்த பேரங்காடியில் இன்னும் பலர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கென்யா நாட்டு அரசாங்கத் தகவல்கள் தெரிவித்தன.
பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்கள்.
கென்யா தலைநகர், நைரோபியின் செல்வந்தர்கள் கூடும் பகுதியிலுள்ள இந்த பேரங்காடியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அறிவித்த கென்யா நாட்டு அதிபர் உகுரு கென்யாட்டா, இந்த தாக்குதலில் தனது சொந்த குடும்ப உறுப்பினர்களையும் தான் இழந்துள்ளதாக தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில் தெரிவித்துள்ளார்.
சோமாலியாவைத் தளமாகக் கொண்ட, அல்கைடா பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புடைய ‘அல்-ஷெபாப்’ என்ற பயங்கரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பு என அறிவித்துள்ளது.
தாக்குதல் நடந்த பேரங்காடி, அதிகமான அளவில் வெளிநாட்டவர்கள் வருகை தரும் ஓர் இடம் என்றும் அதனால் இங்கு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
மரணமடைந்தவர்களில் இரண்டு பேர் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் கனடிய வெளிநாட்டுத் தூதரக அதிகாரி என்றும், மேலும் இரு பெண்மணிகள் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, நான்கு அமெரிக்க பிரஜைகள் காயமடைந்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
(மேலும் விவரங்கள் தொடரும்)