Home One Line P2 “குயின் சோனோ” – ஆப்பிரிக்கச் சந்தையைக் குறிவைக்கிறது நெட்பிலிக்ஸ்

“குயின் சோனோ” – ஆப்பிரிக்கச் சந்தையைக் குறிவைக்கிறது நெட்பிலிக்ஸ்

782
0
SHARE
Ad

இலண்டன் – கட்டணம் செலுத்தி பொழுதுபோக்கு அம்சங்களை இணையம்வழி பார்ப்பதற்கான வணிக அமைப்பைக் கொண்டிருக்கும் நெட்பிலிக்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் இரசிகர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஆப்பிரிக்கச் சந்தையில் நுழைவதற்கான முன்னோட்டமாக “குயின் சோனோ” (Queen Sono) என்ற சொந்த வலைத் தொடர் ஒன்றைத் தயாரித்து பிப்ரவரி 28 முதல் ஒளிபரப்பி வருகிறது.

ஜேம்ஸ் பாண்ட் பாணியில் பெண்மணி ஒருவர் துப்பறிவதை, ஆப்பிரிக்க நாடுகளை மையமாகக் கொண்ட தொடராக “குயின் சோனோ” உருவாக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ஆப்பிரிக்கப் பின்னணியைக் கொண்ட நெட்பிலிக்சின் முதல் வலைத் தொடர் இதுவாகும்.

பல முன்னேறிய நாடுகளில் ஏற்கனவே வலுவாகக் காலூன்றியிருக்கும் நெட்பிலிக்ஸ் அந்த நாடுகளில் அதிகபட்ச சந்தாதாரர்களை ஏற்கனவே பெற்றுவிட்டது. முன்பு அமேசோன் பிரைம் மட்டுமே போட்டி நிறுவனமாக இருந்த நிலையில், இப்போது டிஸ்னி பிளஸ், ஆப்பிள் டிவி என பல புதிய நிறுவனங்கள் இதே பாணி வணிகத்தை மையப்படுத்தி நெட்பிலிக்சோடு போட்டியில் குதித்திருக்கின்றன.

குயின் சோனோவைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவை மையப்படுத்திய மேலும் பல வலைத் தொடர்களையும், கார்ட்டூன் இரகத் தொடர்களையும், இளையோர்களுக்கான தொடர்களையும் நெட்பிலிக்ஸ் தயாரித்து வெளியிடவிருக்கிறது.

ஆப்பிரிக்காவில் மட்டும் நெட்பிலிக்ஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை என்ன என்பதை நெட்பிலிக்ஸ் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. எனினும் அதன் புள்ளிவிவரங்களின்படி ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதன் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 47.4 மில்லியன் ஆகும்.

இலண்டனைச் சேர்ந்த மின்னிலக்க வணிக ஆய்வாளர்கள் ஆப்பிரிக்காவில் சுமார் 1.41 மில்லியன் சந்தாதாரர்கள் இருப்பார்கள் எனக் கணிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் தென் ஆப்பிரிக்காவில் இருக்கிறார்கள். 2025-ஆம் ஆண்டுக்குள் இந்த ஆப்பிரிக்க சந்தாதாரர்களின் எண்ணிக்கை 5 மில்லியனாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ந்து வரும் சந்தையாகப் பார்க்கப்படும் ஆப்பிரிக்காவில், 2024-ஆம் ஆண்டுக்குள் இணையம் வழி வழங்கப்படும் தொலைக்காட்சி மற்றும் காணொளி மூலம் கிடைக்கக் கூடிய மொத்த வருமானம் 1 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என மதிப்பிடப்படுகிறது. 2023-க்குள் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருமானம் 2018-இல் 223 மில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது. 2017-இல் ஆப்பிரிக்காவின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.56 மில்லியனாக மட்டுமே இருந்தது.

தரமான, சிறந்த உள்ளடக்கங்களை ஆப்பிரிக்க சந்தாதாரர்களுக்கு இதுவரை வழங்காத காரணத்தினாலேயே இதுவரையில் ஆப்பிரிக்க சந்தாதாரர்கள் இணையம் வழியாக பொழுதுபோக்கு அம்சங்களை கட்டணம் செலுத்திப் பெறுவதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள் என்றும் இனி அந்த நிலைமை மாறும் என்றும் வணிக ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.