கோலாலம்பூர் : மாறிவரும் புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப நெட்பிலிக்ஸ் போன்ற கட்டண வலைத்திரைகளும் பிரபலமாகி வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு மலேசியாவின் ஒரே துணைக்கோளத் தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ, நெட்பிலிக்ஸ் தளத்தையும் தனது அலைவரிசைகளில் ஒன்றாக இணைத்துக் கொள்ளவிருக்கிறது.
இரண்டு நிறுவனங்களும் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையின் தங்களின் இணைப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
விரைவில் ஆஸ்ட்ரோ தளத்துக்கான இணைப்புப் பெட்டியில் நெட்பிலிக்சும் இடம் பெறும்.
இதன் மூலம் இனி வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ, நெட்பிலிக்ஸ் என தனித் தனியாக கட்டணம் செலுத்தவேண்டியதில்லை. நெட்பிலிக்ஸ் தளத்தை ஆஸ்ட்ரோ மூலம் இணைத்துக் கொண்டு ஒரே கட்டணமாக ஆஸ்ட்ரோவின் கட்டணத்திலேயே நெட்பிலிக்ஸ் கட்டணத்தையும் செலுத்தலாம்.
நெட்பிலிக்சுடன் இணைவதன் மூலம் நாட்டிலேயே முதல் நிலையில் இருக்கும் பொழுதுபோக்கு நிறுவனமான ஆஸ்ட்ரோ தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது என ஆஸ்ட்ரோ குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஹென்ரி டான் தெரிவித்தார்.
பலதரப்பட்ட அலைவரிசைகளைக் கொண்ட ஆஸ்ட்ரோவுடன் இணைவதன் மூலம் மேலும் கூடுதலான மலேசியர்களுக்கு நெட்பிலிக்ஸ் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்க முடியும் என நெட்பிலிக்ஸ் ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கான வணிக மேம்பாடு உதவித் தலைவர் டோனி சாமெஸ்கோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.