மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்கினோ இன்று வியாழக்கிழமை (ஜூன் 24) காலமானார். அவருக்கு வயது 61.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 2010 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக பதவி வகித்தார். அவரது தாயார் கொரோசோன் அக்கினோவும் பிலிப்பைன்ஸ் அதிபராக பதவி வகித்திருக்கிறார்.
1986 ஆம் ஆண்டு முதல் 1992-ஆம் ஆண்டு வரை பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக இருந்தார் கொரோசோன் அக்கினோ. அவரது மகன்தான் இன்று காலமான பெனிக்னோ அக்கினோ ஆவார்.
2009-ஆம் ஆண்டில் கொரோசோன் அக்கினோ மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது பிரபலத்தினால் அவரது மகனான பெனிக்னோ அதிபர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பெனிக்னோவின் தந்தையான அக்கினோ புகழ்பெற்ற ஜனநாயக போராளி ஆவார். அப்போதைய பிலிப்பைன்ஸ் நாட்டின் சர்வாதிகாரி பெர்டினன்ட் மார்க்கோசுக்கு எதிராக அரசியல் போராட்டம் நடத்தியவர் அக்கினோ. அதற்காக அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
1983ஆம் ஆண்டில் நாடு திரும்பியபோது மணிலாவில் விமான நிலையத்திலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை மார்க்கோஸ் உத்தரவிட்டு சுட்டுக் கொன்றார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து மார்க்கோஸ் தனது அரசியல் எதிரியை ஒழித்துக் கட்டி விட்டதாக இறுமாப்புடன் இருந்த போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென அக்கினோவின் மனைவியான கொரோசோன் அக்கினோ நாடு திரும்பி மார்க்கோசுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்தார்.
அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றார். மார்க்கோசும், அவரின் மனைவி இமெல்டா மார்க்கோசும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் திருத்தப்பட்டு கொரோசோன் அக்கினோ அதிபராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பிலிப்பைன்ஸ் அதிபராக ஒருவர் ஒரே ஒரு தவணைக்கு மட்டுமே – ஆறு ஆண்டுகளுக்கு அதிபராக இருக்க முடியும் என்ற சட்டத் திருத்தத்தையும் அவர் கொண்டு வந்தார்.
கொரோசோன் அக்கினோ அதிபராக இருந்த காலகட்டத்தில் 1987ஆம் ஆண்டில் அவரது குடும்பத்தினரை சுட்டுக் கொன்று ஆட்சியைக் கைப்பற்ற இராணுவ ரீதியான ஒரு முயற்சி மேற்கொள்ளப் பட்டது.
அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுடப்பட்டார் பெனிக்னோ. அந்தத் துப்பாக்கிச் சூட்டில் அவரது 3 மெய்க்காப்பாளர்கள் கொல்லப்பட்டனர்.
பெனிக்னோ இன்று காலமானதைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தின் அரசியல் ஈடுபாடு ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுகின்றது.