Home இந்தியா விக்கிபீடியா தமிழ் – கட்டற்ற தமிழ்க் களஞ்சியத்தின் 10 ஆண்டுகள் நிறைவு சாதனை!

விக்கிபீடியா தமிழ் – கட்டற்ற தமிழ்க் களஞ்சியத்தின் 10 ஆண்டுகள் நிறைவு சாதனை!

1063
0
SHARE
Ad

Tamil-wikipedia-sliderசெப்டம்பர் 29 – உலகம் முழுவதும் கணினி மயமாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தமிழ் மொழிக்கு கிடைத்த மற்றொரு வரப்பிரசாதமான விக்கிபீடியா எனப்படும் கட்டற்ற தமிழ்க் களஞ்சியம், இணைய உலகில் பவனி வரத் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

#TamilSchoolmychoice

இன்றைக்கு இணையத் தளத்தில் தமிழுக்கென இருக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட மிகப் பெரிய தகவல் களஞ்சியமாக விக்கிபீடியா தமிழ் திகழ்கின்றது.

55,000க்கும் மேற்பட்ட கட்டுரைகள்; 900க்கும் மேற்பட்டவர்களால் தணிக்கை செய்யப்பட்டு, திருத்தப்பட்ட தகவல்கள்; இவர்கள் 11 வயது முதல் 77 வயது வரையிலான பலதரப்பட்ட மனிதர்கள்; என்பதெல்லாம் விக்கிபீடியா தமிழ்க் களஞ்சியத்தின் மற்ற சிறப்புக்களாகும்.

தமிழ் விக்கிபீடியா சமூகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு முழுநாள் கருத்தரங்கு மாநாடாக  தமிழகத்தின் அண்ணா பல்கலைக் கழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

இந்த விழாவின் ஏற்பாட்டுக் குழுவினரில் ஒருவரான ரவி சங்கர், தமிழ் விக்கிபீடியாவின் இதுநாள் வரை சாதனை கொண்டாட்டத்திற்குரியது என்றாலும் இந்த கருத்தரங்கைப் பயன்படுத்தி இந்த களஞ்சியத்தை எப்படி நாம் இன்னும் மேம்படுத்தலாம் என சிந்திக்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது எனக் கூறுகின்றார்.

தமிழ் விக்கிபீடியாவில் புதைந்துள்ள ஆற்றல்களை, வாய்ப்புகளை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் ரவி சங்கர் தமிழகத்தின் இந்து ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய பேட்டியொன்றில் கூறியிருக்கின்றார்.

தமிழ் மக்களை விட குறைந்த அளவிலான எண்ணிக்கையைக் கொண்ட மற்ற மொழிகளைப் பயன்படுத்துபவர்கள் விக்கிபீடியாவில் மேலும் அதிகமான அளவில் தங்களின் பங்களிப்பை வழங்குகின்றார்கள். மேலும் சில ஆயிரம் பேர் தங்களை இந்த களஞ்சியத்தில் பதிந்து கொண்டு தங்களின் படிவங்களை தொடர்ந்து வழங்கி வந்தால், ஆங்கிலத்தைப் போன்றே தமிழும் சிறந்த முறையில் விக்கிபீடியாவில் பயன்படுத்தப்படும் மொழியாக திகழத் தொடங்கும்” என்றும் ரவி சங்கர் தெரிவிக்கின்றார்.

இலட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்

http://ta.wikipedia.org என்ற வலைத்தளத்தின் வழி இயங்கும் தமிழ் விக்கிபீடியாவை தினமும் ஏறத்தாழ 175,000 பார்வையாளர்கள் தொடர்பு கொள்கின்றார்கள்.

தமிழ் விக்கிபீடியாவின் துணை வலைத் தளமான தமிழ் விக்கிஷனரி எனப்படும் அகராதி 283,000 வார்த்தைகளைக் கொண்டு இந்திய மொழிகளிலேயே மிகப்பெரிய வலைத்தள அகராதியாகத் திகழ்கின்றது. உலக அளவில் 16வது மிகப் பெரிய அகராதியாக இந்த தமிழ் விக்கிஷனரி திகழ்கின்றது.

இந்த தமிழ் விக்கிபீடியாவில் புதியவர்களை ஈர்க்க ஏற்பாட்டாளர்கள் 30,000 இந்திய ரூபாய் ரொக்கப் பரிசாகக் கொண்ட கட்டுரைப் போட்டியொன்றை அறிவித்திருக்கின்றார்கள்.

தமிழ் விக்கிபீடியாவில் தொடர்ந்து அடிக்கடி தனது பங்களிப்பை வழங்கி வருபவர்களில் முக்கியமானவர் 77 வயது நிரம்பிய சென்னைவாசி செங்கை பொதுவன் ஆவார். இவர் இன்று அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் தமிழ் விக்கிபீடியாவின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வார்.

இதுவரை தமிழ் விக்கிபீடியாவுக்கென 2,580 எண்ணிக்கையிலான புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளை இவர் படைத்திருக்கின்றார். ஏறத்தாழ 29,000 தகவல்களை இவர் திருத்தி, தணிக்கை செய்துள்ளார்.

தொலைபேசியின் வழி இந்து ஆங்கிலப் பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில் எனது குறிக்கோள் என்னவென்றால் தமிழ் இலக்கியத்தின் அனைத்து படிவங்களையும் ஒருங்கிணைத்து அவற்றை வரிசைப் பட்டியலிட வேண்டும்.  ஒவ்வொரு தமிழ் நூலும் அதன் ஆசிரியரும் இதில் இடம் பெற வேண்டும்” என செங்கை பொதுவன் கூறியிருக்கின்றார்.

இன்று அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் நிகழ்வு குறித்த மேல்விவரங்களை கீழ்க்காணும் இந்த வலைத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

http://ta.wikipedia.org.