அக்டோபர் 3 – படத்தில் பாடல்கள் ஒன்று கூட இல்லை! கதாநாயகன் போல வருபவர்தான் காவல் துறையினரால் படம் முழுக்க விரட்டப்படும் படத்தின் வில்லனும் கூட! அவருக்கென்று கதாநாயகி இல்லை, வெளிநாட்டில் பாடல் காட்சிகள் இல்லை; முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை முதல் கதாநாயகனும் அவருடன் இணைந்து பயணம் செய்யும் கதாபாத்திரமாக வரும் இளைஞனும் ஒரே சட்டையில் தான் காட்சியளிக்கின்றார்கள்.
– தமிழ் சினிமாவின் மேல் கொண்ட காதலால், சமரசம் செய்துகொள்ளாமல் தனது படைப்புக்களை உருவாக்கி வந்த இயக்குநர் மிஷ்கின் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவை இன்னொரு புதிய பரிமாணத்திற்கு, அடுத்த கட்ட களத்திற்கு துணிச்சலுடன் கொண்டு சென்றிருக்கின்றார்.
கதாநாயகப் பாத்திரத்தில் மிஷ்கினே வருகின்றார். கலைந்த முடியுடன் படம் முழுக்க அவர் பேசும் வசனங்களை ஒரு பக்கத்தில் அடக்கி விடலாம். அவரது மீதி அத்தனைக் காட்சிகளும் திரைக்கதையோடும், முக பாவங்களோடும், விறுவிறுப்பாக நகர்கின்றன.
‘வழக்கு எண் 18/19’ படத்தில் தேநீர் கடையில் வேலை செய்து கொண்டே வேலைக்காரியைக் காதலிக்கும் பையனாக வந்த ஸ்ரீ இதில் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கின்றார், உருவத்தாலும், தனது நடிப்பாலும்! இந்தப் படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் அவர்தான்.
கதைக்களம்
படத்தின் கதையை மூன்று வரிகளில் சொல்லிவிடலாம். ஆனால் இந்தப் படத்தில் கதையை விட ‘பிலிம் மேக்கிங்’ எனக் கூறப்படும் படத்தின் உருவாக்கத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் அழகியலோடும், நாம் நிமிர்ந்து உட்கார்ந்து ரசித்துப் பார்க்கும் வண்ணமும் படமாக்கப்பட்டுள்ளது.
முதல் காட்சியில் துப்பாக்கியால் சூடுபட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்கும் மிஷ்கினை சந்துரு என்ற மருத்துவ மாணவன் (ஸ்ரீ) ஒருவன் காப்பாற்றுகின்றான். ஆனால், காப்பாற்றப்பட்ட மிஷ்கின் காவல் துறையினரால் தேடப்படும் ஒரு பயங்கர கொலைக் குற்றவாளி என்பது மறுநாள் தெரிய வர காவல் துறையின் நெருக்குதலுக்கு அவனும் அவனது குடும்பத்தினரும் ஆளாகின்றார்கள்.
விசாரணைக்குப் பின்னர் ஸ்ரீயை வைத்தே மிஷ்கினைப் பிடிக்க காவல் துறையினர் வியூகம் வகுக்க, அந்த வியூகத்திலிருந்து மிஷ்கின் எப்படி தப்பிக்கின்றார், எதற்காக அவர் காவல் துறையினரிடமிருந்து தப்பித்து ஓடுகின்றார் என்பதெல்லாம் திரைக்கதையாக விரிகின்றது.
இதற்கிடையில், பழைய பகைமையால் மிஷ்கினை சுட்டுக் கொல்ல நினைக்கும் போட்டி கொலைக் கும்பல் ஒன்றும் அலைகின்றது. இவர்களுக்கு உள்ளேயிருந்து ரகசியத் தகவல் அனுப்பும் துரோகக் கும்பல் காவல் துறையினரும் உண்டு.
படத்தின் முக்கால் வாசி வரை மிஷ்கினும் இன்னும் சிலரும் ஒரு மையத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள். அது என்ன என்பதை மிஷ்கின் சில வரிகளால், ஓநாயையும், கரடியையும், ஆட்டுக் குட்டியையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு ஒரு கதையாகச் சொல்வதும் அது நமக்கு தெள்ளத் தெளிவாகப் புரிவதும் இயக்குநரின் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
மற்றபடி பின்னோக்கிச் சென்று கதையைச் சொல்லும் ‘பிளாஷ்பேக்’ கதைகள் எதுவும் இல்லாததும் இந்தப் படத்தில் கையாளப்பட்டிருக்கும் மற்றொரு உத்தி.
சில காட்சிகள் நீளமாக, மெதுவாக நகர்ந்தாலும், படம் முழுக்க நம்மை நாற்காலியின் நுனிக்குக் கொண்டு வந்து, ஆடாமல் அசையாமல் அடுத்தது என்ன என்று திரையையே பார்த்துக் கொண்டிருக்கும் வண்ணம் திரைக்கதையை திறமையாக கொண்டு சென்றிருக்கின்றார் மிஷ்கின்.
ஆரம்பக் காட்சிகளைத் தவிர்த்து முக்கால் வாசிப் படமும் ஒரே இரவில் நடந்து முடிவதாக திரைக் கதையை அமைத்திருக்கின்றார்கள். எனவே, எல்லாமே இரவுக் காட்சிகள்தான்! ஆனால், கண்ணை உறுத்தாத வெளிச்சத்தில் இரவுக் காட்சிகளை அற்புதமாகப் படம் பிடித்து நாம் நேரிலேயே அந்த இரவுக் காட்சிக்குள் இருப்பதைப் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றார் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா.
சென்னைத் தெருக்கள் இரவு நேரத்தில் இப்படியும் அழகாக இருக்குமா என்று நாம் யோசிக்கும் அளவுக்கு ஒளிப்பதிவாளர் பாடுபட்டிருக்கின்றார்.
படத்தின் நிறைகள்
படமே தமிழ் சினிமாவைப் புதுயுகத்திற்குள் நுழைக்கும் ஒரு முயற்சி என்பதால் படத்தின் நிறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
படத்தின் மற்றொரு சிறப்பு பாடல்களே இல்லாவிட்டாலும், பின்னணி இசையிலேயே இசை சாம்ராஜ்யம் நடத்தியிருக்கும் இளையராஜாவின் உழைப்பும் அனுபவமும். இரயில் வரும் போகும் காட்சிகளிலும், இரவு நேரங்களில் மனிதர்கள் மற்றும் வாகனங்களின் விரட்டுதல்களிலும் பின்னணி இசையின் மூலமாக, படத்தின் விறுவிறுப்பை மேலும் கூட்டியிருக்கின்றார் இளையராஜா. படத்தின் ஓட்டத்திற்கும் விறுவிறுப்பிற்கும் பின்னணி இசையின் மூலம் எப்படியெல்லாம் மெருகேற்றலாம் என ஒரு பாடமே படித்துக் கொள்ளும் அளவுக்கு தனது அனுபவத்தை இந்தப் படத்தில் இளையராஜா காட்டியிருக்கின்றார்.
படத்தில் வரும் காவல் துறையினர் எல்லாருமே புதுமுகங்களாக இருப்பதால் வெகு இயல்பாக நடித்திருக்கின்றனர். மிடுக்கான அதே சமயத்தில் இயல்பான அசல் காவல் துறை அதிகாரிகளை நேரில் பார்த்தவண்ணம் இருக்கின்றது. அவர்களின் பேச்சு பரிவர்த்தனைகளும் வெகு இயல்பாக நம்பும்படி, கதையோடு பொருந்தி இருக்கின்றன.
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் வித்தியாசமான கோணங்களில் சிரமப்பட்டுப் படமாக்கியிருக்கின்றார் மிஷ்கின். சாதாரண காட்சிகள் கூட, காலியான தெருக்கள் கூட ஒளிப்பதிவாளரின் ஒளியமைப்பாலும், வித்தியாசமான கோணங்களாலும் நம்மை உன்னிப்பாக பார்க்க வைக்கின்றன. இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஒரு மனதோடு ஒன்றித்து இணைந்து படம் முழுக்க பயணித்திருப்பது தெளிவாகத் தெரிகின்றது.
படத்தின் குறைகள்
எவ்வளவுதான் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டிருந்தாலும், நெருடல்களாக படத்தில் பல இடங்களில் குறைபாடுகள் இழையோடுகின்றன.
காவல் துறையினரால் அவ்வளவு தீவிரமாகத் தேடப்படும் மிஷ்கின் முதல் காட்சியில் ஆள் அரவம் இல்லாத நெடுஞ்சாலையில் காயம்பட்ட உடலோடு ஒற்றை ஆளாக ஓடி வருவது நம்ப முடியாததாக இருக்கின்றது. அவரது முகத்தைப் பார்க்கும் காவல் துறையினருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. ஆனால் மொத்த காவல் துறையினராலும் தேடப்படும் அதிபயங்கர குற்றவாளியாம் அவர்!
சில காட்சிகள் வேண்டுமென்றே நீளமாக, மெதுவாக நகர்கின்றது. குறிப்பாக, வில்லன் மோட்டார் சைக்கிளை இயக்க முடியாமல் அத்தனை முறை உதைத்து முயற்சிப்பதைக் கூட அவ்வளவு நேரம் காட்ட வேண்டுமா எனக் கேட்கத் தோன்றுகின்றது.
எனவே, படத் தொகுப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். குறிப்பாக இறுதிக் காட்சியில் காலியான கார் நிறுத்தும் கட்டிடத்தில் வில்லன்கள் ஒவ்வொருவராக நுழைவதும் அவர்களுடன் மிஷ்கின் ஒற்றை ஆளாக சண்டையிடுவதும் பழைய பாணி சினிமாத்தனம். எவ்வளவோ தொழில் நுட்ப அம்சங்களில் வித்தியாசத்தைக் கொண்டு வந்தவர் இறுதிக் காட்சி சண்டைக் காட்சிகளில் கொஞ்சம் வித்தியாசத்தைக் காட்டியிருக்கலாம்.
அதே போல, இறுதியில் வரும் கிறிஸ்துவ கல்லறைக் காட்சியும் நீண்டு கொண்டே போகின்றது.
படம் முழுக்க பல கதாபாத்திரங்கள் கொலை செய்யப்படுகின்றார்கள். இந்தக் கதைக்கு இத்தனை பேர் கொல்லப்பட வேண்டுமா என்ற கேள்வியும் எழுகின்றது.
ஒரே இரவில், அத்தனை காவல் துறையினரும், ரவுடிக் கும்பல்களும் அவ்வளவு சர்வ சாதாரணமாக சுட்டுக் கொல்லப்படுவது சாத்தியமானதா அதுவும் ரவுடிகள் காவல் துறையினரை தேவையில்லாமல் அவ்வளவு துணிச்சலாகச் சுட்டுக் கொல்வார்களா என்பதையும் நம்ப முடியவில்லை.
அதுவும் இரவு நேரத்தில் காட்டப்படும் அத்தனை சென்னைத் தெருக்களும் காலியாகக் கிடக்கின்றன. ஒருவர் கூட நடந்து செல்வதாகவோ, வாகனங்களில் செல்வதாகவோ காட்டப்படவில்லை. எங்கேப்பா இருக்கின்றது இப்படிப்பட்ட சென்னைத் தெருக்கள் எனக் கேட்கத் தோன்றுகின்றது.
அவ்வளவு மோசமான காயம்பட்ட நிலைமையில் இருக்கும் மிஷ்கின், அதுவும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பின்னர், ஓரிரு நாட்களிலேயே சென்னைத் தெருக்களில் அவ்வளவு அனாயசமாக ஓடுவதும் குதிப்பதும் மற்றொரு நெருடல். அவரும் அதைப் புரிந்து கொண்டவர்போல் இடையிடையே சில காட்சிகளில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு வலியில் துடிக்கின்றார்.
குடும்பத்தில் உள்ள அனைவருமே குருடர்களாகக் காட்டப்பட வேண்டுமா என்ற எண்ணமும் நமக்கு எழாமல் இல்லை. படத்தில் வரும் அத்தனை குருடர்களுக்கும் மிஷ்கினைத் தெரிந்திருக்கும் அளவுக்கு அவர் என்ன செய்தார் என்பதும் காட்டப்படவில்லை.
இருப்பினும் முழுமையான படம் முடிந்து வெளிவரும்போது நமக்கு ஏற்படும் சினிமா அனுபவத்தின் முன்னால் இவையெல்லாம் நாம் மறந்து விடும்படியான சிறு குறைபாடுகளாகவே தெரிகின்றன.
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்ற முக்கிய படங்களுள் ஒன்றாக இனிவரும் காலங்களில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பேசப்படும்.
படத்தின் ஒளிப்பதிவையும், இளையராஜாவின் பின்னணி இசையையும் இரவு நேரக்காட்சி அமைப்புக்களின் நேர்த்தியையும் ரசிக்க வேண்டுமானால் தவறாமல் திரையரங்குகளுக்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள்.
என்றும் நினைவில் நிற்கும் ஒரு படத்தை பார்த்த மகிழ்ச்சியைப் பெறுவீர்கள்!
-இரா.முத்தரசன்