கோலாலம்பூர், அக் 5 – மசீச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான லீ ஹுவா பெங் நேற்று முன்தினம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு காரணம் என்னவென்று நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த லீ ஹுவா பெங், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தான் மசீச தலைவர் சுவா சொய் லெக்கிற்கு எதிராக (Anybody But Chua Soi Lek) என்ற இயக்கத்தை தொடங்கியதாகவும், அதன் காரணமாக தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிள்ளான் துறைமுகத்தின் தீர்வையற்ற மண்டலம் தொடர்பான தனது நூல் வெளியீட்டு விழாவிற்கு எதிர்கட்சியைச் சேர்ந்த ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை அழைத்தது தான் காரணம் என்று கூறப்படுவதை லீ ஹுவா பெங் மறுத்தார்.
“நூல் வெளியீட்டு விழா தான் என்னை கட்சியிலிருந்து விலக்கியதற்குக் காரணம் என்றால் அது எப்போதோ நடந்து இருக்க வேண்டும்” என்று லீ குறிப்பிட்டார்.
மசீச கட்சியில் நீண்ட காலமாக இருந்து வரும் லீ ஹுவா பெங், சுபாங் ஜெயா சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார்.