கோலாலம்பூர், அக் 5 – தொலைந்து போன துப்பாக்கிகளுக்கு காவல்துறையின் கவனக்குறைவு தான் காரணம் ஆனால் அதில் ஊழல் ஏதும் நிகழ வாய்ப்பில்லை என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சாஹிட், “அந்த தவறு ஏற்பட்டதற்கு கவனக்குறைவு தான் காரணம்” என்று ஒப்புக்கொண்டார்.
மேலும், அடுத்த ஆண்டு ஆயுதங்கள் குறித்த கணக்கு அறிக்கையில் காணாமல் போன துப்பாக்கிகள் குறித்து தெரிவிக்கப்படும் என்றும், காவல்துறையின் மரியாதையை கணக்காய்வாளரின் அறிக்கை போக்கி விடுமோ என்று தான் அஞ்சுவதாகவும் சாஹிட் கூறினார்.
எனினும், மக்களுக்கு காவல்துறையின் மீது இன்னும் நம்பிக்கை இருப்பதாகவும் சாஹிட் குறிப்பிட்டார்.
மலேசிய காவல்துறைக்குச் சொந்தமான துப்பாக்கிகள், கைவிலங்குகள், வாகனங்கள் என மொத்தம் 309 பொருட்கள் காணவில்லை என்று தேசிய கணக்காய்வாளர் சார்பாக கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது.
அதன்படி, கடந்த 2010 ஆம் ஆண்டிற்கும், 2012 ஆம் ஆண்டிற்கும் இடையே காணாமல் போனதாக கூறப்படும் 156 கைவிலங்குகள், 44 ஆயுதங்கள், 29 வாகனங்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பு 1.33 ரிங்கிட் மில்லியன் ஆகும்.