Home உலகம் பிரபல ஆங்கில நாவலாசிரியர் டோம் கிளென்சி காலமானார்!

பிரபல ஆங்கில நாவலாசிரியர் டோம் கிளென்சி காலமானார்!

915
0
SHARE
Ad

Tom-Clancy-Feature5 அக்டோபர் – பல புகழ் பெற்ற ஆங்கிலப் படங்களாக உருமாறிய நாவல்களைப் படைத்த ஆங்கில நாவலாசிரியர் டோம் கிளென்சி(Tom Clancy) கடந்த அக்டோபர் 1ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 66.

#TamilSchoolmychoice

அவரது நாவல் கதாபாத்திரங்களில் மிகவும் புகழ் பெற்றது ஜேக் ரயான் என்ற அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் அதிகாரி கதாபாத்திரமாகும். அரசியல் பின்னணி, இராணுவ இரகசியங்கள், தொழில் நுட்பம் இவற்றை உள்ளடக்கிய வியூகங்களோடு அவர் படைத்த நாவல்கள் உலகமெங்கும் வாசகர்களைக் கவர்ந்து இலட்சக்கணக்கில் விற்பனையாகின.

அவருக்கு இருந்த தொடர்புகளின் மூலம் அரசாங்கம் மற்றும் இராணுவ, உளவுத் துறை அமைப்புக்களின் உள்ளிருந்து கிடைத்த இரகசியத் தகவல்களைக் கொண்டு அவர் தனது நாவல்களை வடிவமைத்தார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் அதிகம் விற்பனையாகும் நாவல்களின் பட்டியல்களில் டோம் கிளென்சியின் 28 நாவல்கள் இதுவரை இடம் பெற்றிருக்கின்றன.

1984ஆம் ஆண்டு வெளிவந்த “தெ ஹண்ட் ஃபோர் ரெட் அக்டோபர்” (The Hunt For Red October) என்ற நாவல்தான் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அந்த நாவலின் கதாநாயகப் பாத்திரமாக அவர் படைத்த ஜேக் ரயான் என்ற கதாபாத்திரத்தை தனது அடுத்த சில நாவல்களிலும் அவர் மையக் கதாபாத்திரமாகப் பயன்படுத்தினார்.

“தெ ஹண்ட் ஃபோர் ரெட் அக்டோபர்” நாவல் பின்னர் பிரபல ஆங்கில நடிகர்களான ஷான் கானரி மற்றும் அலெக் பால்ட்வின் ஆகியோரை கொண்டு படமாக வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து “பேட்ரியோட் கேம்ஸ்” (Patriot Games), “கிளியர் எண்ட் பிரெசெண்ட் டேஞ்சர்” (Clear And Present Danger), “தெ சம் ஆஃப் ஆல் ஃபியர்ஸ்” (The Sum Of All Fears) போன்ற அவரது ஆங்கில நாவல்கள் அதே ஜேக் ரயான் என்ற துப்பறியும் சிஐஏ அதிகாரியை மையக் கதாபாத்திரமாக வைத்து வெளிவந்து புகழ்பெற்று பின்னர் அதே பெயர்களில் படங்களாக வெளிவந்து புகழ் பெற்றன. அந்த ஜேக் ரயான் கதாபாத்திரத்தை வேறு வேறு ஹாலிவுட் நடிகர்கள் நடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது இறுதி நாவலான கொம்மாண்ட் அத்தோரிட்டி (Command Authority) எதிர்வரும் டிசம்பரில்தான் வெளியாக உள்ளது.

“ஜேக் ரயான்: ஷேடோ ரிக்ருட்” (Jack Ryan: Shadow Recruit) என்ற பெயரில் அடுத்து வெளியாகப் போகும் ஆங்கிலப் படமும் அவரது ஜேக் ரயானின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படமாகும்.