Home வணிகம்/தொழில் நுட்பம் அதிக மதிப்பு வாய்ந்த முத்திரை சின்னம்: கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம்...

அதிக மதிப்பு வாய்ந்த முத்திரை சின்னம்: கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது!

1080
0
SHARE
Ad

apple-logo-blueஅக்டோபர் 6 – இன்றைய வணிக உலகில் முத்திரை சின்னங்கள் (brand) ஒரு நிறுவனத்தின் மதிப்பை உயர்த்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் கடந்த13 ஆண்டுகளாக உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த முத்திரை சின்னமாக வணிக ஆய்வாளர்களால் கோக்கோ கோலா நிறுவனத்தின் முத்திரை சின்னம்தான் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

ஆனால், தற்போது செல்பேசி மற்றும் கணினி உலகில் முன்னணி வகித்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் முத்திரை சின்னம்தான் கோக்கோ கோலாவைவிட அதிக மதிப்பு வாய்ந்தது என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் முத்திரை சின்னத்தின் இன்றைய மதிப்பு 98.3 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் என “சிறந்த உலகளாவிய முத்திரை சின்னங்கள்” என்ற ஆய்வறிக்கை குறிப்பிட்டிருக்கின்றது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கோக்கோ கோலாவுக்கு அடுத்த இரண்டாவது நிலையிலேயே இருந்து வந்த ஆப்பிள் நிறுவனம் தற்போது வர்த்தக உலகில் சில்லறை வணிகத்தில் முன்னணி வகிப்பது, ஐ-போன்களின் அதிகமான விற்பனைகள், மேக் எனப்படும் கணினி வகைப் பொருட்களின் எதிர்கால தேவைகள் போன்ற அம்சங்களின் அடிப்படையில் முன்னணி முத்திரை சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நிலையில் கூகுள் நிறுவனம்

google-glitch-635ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக இரண்டாவது நிலையில் மதிப்பு வாய்ந்த முத்திரை சின்னமாக கூகுள் நிறுவனம் கணிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் முத்திரை சின்னத்தின் மதிப்பு 34 சதவீதம் உயர்ந்து தற்போது 93.3 பில்லியன் அமெரிக்க டாலராக கணக்கிடப்பட்டுள்ளது.

13 ஆண்டுகளாக முதல் நிலையில் ஆதிக்கம் செலுத்தி வந்த கோக்கோ கோலாவின் முத்திரை சின்னம் தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, 79.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைக் கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

நான்காவது இடத்தில் ஐபிஎம் (IBM) என்ற கணினி நிறுவனம் அதிக மதிப்பு வாய்ந்த உலக முத்திரை சின்னமாகத் திகழ்கின்றது.