இஸ்லாமாபாத், அக் 10- பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும் ராணுவ படை தளபதியுமான பர்வேஸ் முஷாரப்பிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமி்ன் வழங்கியுள்ளது இதனையடுத்து அவர் துபாய்க்கு பறக்க உள்ளார்.
பாகிஸ்தானின் வரலாற்றில் ஓய்வு பெற்ற பின்னர் கைது செய்யப்பட்ட முதல் ராணுவ தளபதி மற்றும் முன்னாள் அதிபர் என்ற பெருமைக்குரிய பர்வேஸ் முஷாரப்பிற்கு அந்நாட்டு நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியுள்ளது. முஸாரப் அதிபர் பதவியை விட்டு விலகிய பி்ன்னர் வெளி நாடுகளில் வசித்து வந்தார். இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தானாகவே முன்வந்து தன்மீதான வழக்குகளின் அடிப்படையில் நேரில் ஆஜரானார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் காவலில் வைக்கப்பட்டார்.
கடந்த மே மாதம் 11 -ம் தேதி பாகிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது . இதில் போட்டியிடுவதற்காகவே வெளி நாட்டில் இருந்து வந்திருந்தார். இருப்பினும் ஏற்கனவே இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் தேர்தலில் போட்டியிட முடியாமல் தொடர்ந்து வீ்ட்டு காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் மீது ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வந்த பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தை சேர்ந்த பிரிவினைவாத தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் தற்போது முன் ஜாமின் வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் துபாய்க்கு செல்ல திட்டமி்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அவர் மீதான இரண்டு வழக்குகளிலும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.