ஆமதாபாத், அக் 17- ”நரேந்திர மோடி பிரதமரானால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்,” என பா.ஜ மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜ. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நரேந்திர மோடியை சந்திப்பதையும் அத்வானி தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த மாதம் நடந்த பொதுக் கூட்டத்தில் இரண்டு பேரும் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் அத்வானியை மோடி நெருங்கி வந்தபோதும் அவரை அத்வானி புறக்கணித்தார். இரண்டு பேரும் சரியாக பேசிக் கொள்ளவில்லை. இதனால் நரேந்திர மோடி மீது அத்வானிக்கு உள்ள அதிருப்தி இன்னும் குறையவில்லை என கூறப்பட்டது. பா.ஜ தலைவர்களும் இதனால் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சோமநாதர் கோவில் அறக்கட்டளை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அத்வானி நேற்று வந்திருந்தார். குஜராத்தின் காந்திநகர் லோக்சபா தொகுதி உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்த கூட்டத்தில் பங்கேற்க அத்வானி வந்திருந்தார். பா.ஜ.விலிருந்து விலகி தனிக் கட்சி துவங்கிய குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.முந்தைய ம.பி. பொதுக் கூட்டம் போல் இல்லாமல், இந்த கூட்டத்தில் அத்வானியும் நரேந்திர மோடியும் மிக இயல்பாக சிரித்து பேசினர். அவர்களின் முகத்தில் எந்தவிதமான இறுக்கமும் இல்லை.பின், இரண்டு பேரும் சபர்மதி ஆற்றங்கரையோரம் ஆமதாபாத் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்தனர்.
அப்போது அத்வானி, “நரேந்திர மோடி, வழக்கமான அரசியல் தலைவர் அல்ல. அவரிடம் சில சிறப்பம்சங்கள் உள்ளன. எந்த விஷயத்தையும் எப்போதுமே புதிதாக சிந்திப்பார். நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மாநில பா.ஜ. அரசை இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் உள்ளவர்களும் பாராட்டுகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த லோக்சபா தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தே.ஜ. கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானால், நான் மகிழ்ச்சி அடைவேன்” என்றார் .இதன்மூலம் நரேந்திர மோடி மீது, அத்வானிக்கு உள்ள அதிருப்தி குறைந்து விட்டதாக, பா.ஜ. மூத்த தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.