பிப்ரவரி 9 – வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள்ளாக கும்ப லக்னம் சுக்ரபுத ஹோரையில் தென்கிழக்காசியாவின் முதல் வைணவ திருப்பதி தலமாக போற்றப்படும், கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் பெருமாள் சன்னதிக்கான பிரதான வாசகால் அமைக்கப்படவிருக்கிறது.
வைணவ ஆலயங்களின் தாய் ஆலயமாகவும், முதல் கருங்கல் ஆலயமாகவும் உருவாகி வரும் இவ்வாலயத்தின் புதிய வடிவமைப்புக்கு பக்தர்கள் பேராதரவு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருங்கல் பணியின் ஒரு பகுதியாக சூடி கொடுத்த சுடர்கொடி திருவாய் மலர்ந்தருளிய மணிகதவு எனும் பிரதான துவாரம் (வாசகால்) கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது.
வாசகாலின் மகிமை குறித்து கூற வேண்டுமெனில் சேர அரசனான குலசேகர மன்னன் திருவேங்கட மலையில் படியாய் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தான். அவனது பிரார்த்தனை ஏற்று பெருமாள் தான் எழுந்தருளும் அனைத்து திருக்கோயிலிலும் தன் முன்பாக உள்ள படிகட்டை குலசேகர ஆழ்வார் படி என்று அழைக்கப்படும் என்று கூறினார்.
அதன்படி இவ்வுலகம் உள்ளவரை அப்படி குலசேகர ஆழ்வார்படி என்றே அழைக்கப்படுகிறது. அவர் பிறந்தது மாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில்தான்.
இவ்வளவு சிறப்புமிக்க வாசகால் அமைக்கவிருக்கும் வைபவத்தில் அனைத்து பக்தர்கள் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்கள் கருங்கற்களை உபயமாக வழங்கி வருவதால் அதை முன்னிட்டும் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
அனைவரும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.