கோலாலம்பூர், அக் 24 – ‘குர்பான்’ என்று அழைக்கப்படும் கால்நடைகளை பலியிடும் சமய நிகழ்வுகளை பள்ளிகளில் செய்ய அனுமதியில்லை என்று துணை கல்வி அமைச்சர் பி.கமலநாதன் இன்று அறிவித்தார்.
கடந்த வாரம் சிலாங்கூர் எஸ்கே பூச்சோங் ஜெயா பள்ளியில் புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு மாணவர்கள் முன் மாடு பலியிடப்பட்டது குறித்து வலைத்தளங்களில் கடும் சர்ச்சைகள் எழுந்தன.
அந்த விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் அவ்வாறு மதச் சடங்குகள் செய்யப்படுவதற்குத் தடை ஒன்றும் இல்லை என்று தற்காத்து கருத்துகள் வெளியிட்டார்.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கமலநாதன், “குர்பான் நிகழ்வை பள்ளிகளில் நடத்த அனுமதியில்லை. இந்த விவகாரம் குறித்து நாங்கள் விசாரணை நடத்திவிட்டோம். மாவட்ட கல்வித்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்காதது தான் பிரச்சனைக்குக் காரணம்” என்று தெரிவித்தார்.
மேலும், பள்ளியில் பல இனங்களைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கிறார்கள். எனவே அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்றும் கமலநாதன் குறிப்பிட்டார்.
இது போன்ற குர்பான் நிகழ்வுகளை நடத்துகிறோம் என்று சம்பந்தப்பட்ட பள்ளி மாவட்ட கல்வித்துறைக்கு தகவல் அனுப்பியிருந்தால் அவர்கள் அருகில் உள்ள இஸ்லாமிய தொழுகை இடங்களில் வைத்துக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியிருப்பார்கள் என்றும் கமலநாதன் தெரிவித்தார்.