சென்னை, அக் 24- இலங்கையில் வரும் நவம்பர் 15 ம் தேதி நடக்கவிருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்றும் இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து தாக்கல் செய்தார்.
இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார். காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என பலமுறை அவர் வலியுறுத்தி வருகிறார். மேலும் பிரதமருக்கு கடிதமும் எழுதினார். ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து இது வரை இந்த விஷயத்தில் எந்தவொரு தெளிவான முடிவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக சட்டசபையில் இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தில்; காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. பெயரளவிற்கு கூட பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க கூடாது. சிங்களர்களுக்கு இணையாக தமிழர்கள் வாழ வழி செய்ய வேண்டும் இது தொடர்பாக இலங்கை நடவடிக்கை எடுக்கவில்லை. எடுக்கும்வரை இலங்கையை காமன்வெல்த் நாடுகளில் இருந்து தற்காலிகமாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் முடிவை இலங்கைக்கு இந்தியா உடனே தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி சார்பிலும் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.