புதுடெல்லி, அக் 25 – குறுஞ்செய்தி அனுப்புவதாக அன்னா குழுவினர் 4 கோடி மக்களை ஏமாற்றி ரூ.100 கோடி ஊழல் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தை சமூக சேவர் அன்னா கடந்த 2012ம் ஆண்டு தொடங்கினார்.
இதில் அரவிந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி, குமார் விஷ்வாஸ், மணீஷ் சிசோடியா உட்பட பல முக்கிய பிரபலங்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அன்னா குழுவின் பிரசார நடவடிக்கை விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் தொண்டர்களுக்கு ஓராண்டு அனுப்ப, குறுஞ்செய்தி அட்டைகள் (எஸ்.எம்.எஸ் கார்டு) விற்பனை செய்யப்பட்டது. அதன்பின், கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியதால் அன்னா இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது. பின்னர், குறுஞ்செய்தி மூலம் தொண்டர்களுக்கு தகவல் அனுப்பப்படவில்லை.
இது குறித்து டெல்லியைச் சேர்ந்த ரூபால் சிங் என்பவர் புகார் அளித்தார். அதில், ‘அன்னா இயக்கம் உடைந்த பின் குறுஞ்செய்தி சேவை எந்தவித காரணமும் கூறாமல் நிறுத்தப்பட்டது. குறுஞ்செய்தி அட்டை மூலம் 4 கோடி மக்களிடம் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை அன்னா குழு வசூலித்தது. இந்த மோசடி குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை நேற்று விசாரித்த நீதிமன்றம், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை அடுத்த மாதம் 30ம் தேதி நடைபெறும் விசாரணையில் அறிக்கையாக தாக்கல் செய்யும்படி டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.