புதுடில்லி, அக் 25- நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டு வழக்கில், மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றும், சி.பி.ஐ., விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் சீனாவில் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் வழியில், பிரதமர் மன்மோகன் சிங் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். தான் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்று தெரிவித்துள்ள மன்மோகன், இது தொடர்பாக நடத்தப்படும் அநாகரிக அரசியல் குறித்து தான் வருத்தப்படுவதாகவும் கூறினார்.
மத்திய பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், தனது தந்தை மற்றும் பாட்டியைப் போல தானும் கொல்லப்படலாம் என்று கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர், ராகுலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும், எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர், இது தொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது தனது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவத்துள்ள பிரதமர், பா.ஜ., வின் பிரசாரம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் போகப்போக அது வலிமையற்றதாகி விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில், பிரபல தொழிலதிபர் பிர்லா குமார்மங்கலம் மற்றும் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பரேக் ஆகியோர் மீது சி.பி.ஐ., எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக, பிரதமரும் விசாரிக்கப்படவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.