கோலாலம்பூர், அக் 29 – ஆப்பிள் மற்றும் சாம்சங் செல்பேசி நிறுவனங்களுக்கு இடையே நிலவும் கடுமையான போட்டியில், தற்போது எல்ஜி நிறுவனமும் சேர்ந்து கொண்டு விட்டது. விரைவில் சாம்சங்கிற்குப் போட்டியாக வளைவு திரை கொண்ட எல்ஜி பிளெக்ஸ் (LG Flex) என்ற திறன்பேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.
ஏற்கனவே சாம்சங் நிறுவனம் இதே போல் வளைவு திரை கொண்ட கேலக்ஸி ரவுண்ட் (Galaxy Round) என்ற திறன்பேசியை அறிமுகப்படுத்த தயாராகிக் கொண்டிருந்த வேளையில், அதற்கு இணையாக எல்ஜி தனது திறன்பேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.
6 அங்குல அளவிலான 720 பி ஓஎல்ஈடி திரையும், ஸ்னாப்டிராகன் 800 செயலியும் (processor) 13 மெகாபிக்ட்சல் அளவிலான காமெராவையும் கொண்டுள்ள கொண்ட இந்த ஜி பிளெக்ஸ் திறன்பேசி, எல்ஜி நிறுவனத்தின் முதல் வளை திரை கொண்ட தயாரிப்பு ஆகும்.
சாம்சங் ன் கேலக்ஸி ரவுண்ட் திறன்பேசிக்கும், எல்ஜி ன் ஜி பிளெக்ஸ் திறன்பேசிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், கேலக்ஸி ரவுண்டின் வளைவு திரை கிடைமட்டமாகவும் (horizontally curved screen), ஜி பிளெக்ஸ் ன் வளைவு திரை செங்குத்தாகவும் (vertically curved screen) தயாரிக்கப்பட்டுள்ளன.
எல்ஜி தனது ஜி பிளெக்ஸ் குறித்து கூறுகையில், இது கையில் பிடிப்பதற்கு வசதியாகவும், துல்லியமான ஒலியுடனும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஜி பிளெக்ஸ் திறன்பேசியின் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள நெகிழ் பூச்சு (elastic coating) கருவியை சிறிய அளவிலான அதிர்வு மற்றும் கீறல்களில் இருந்து பாதுகாக்கும் என்பது கூடுதல் தகவல்.
கொரியாவில் அடுத்த மாதம் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஜி பிளெக்ஸ் திறன்பேசியின் விலை மற்றும் வெளியிடும் தேதி குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை.