புதுடெல்லி, நவ 8– காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசும் போது, உத்திர பிரதேசம் கலவரம் பற்றி குறிப்பிட்டார். உத்திர பிரதேசத்தில் முசாபர்நகரில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவுக்கு எதிராக செயல்பட அங்கு இளைஞர்களை தேர்வு செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
அவரது பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்று தேர்தல் ஆணையரிடம் பாரதீய ஜனதா புகார் செய்தது. இதையடுத்து இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு ராகுல்காந்தி பதில் அளித்து தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தான் தேர்தல் நடத்தை விதிகளை மீறிப்பேசவில்லை என்று மறுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் அதன் எண்ணங்களையும் பற்றித்தான் விதிமுறைக்கு உட்பட்டு பேசினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.