கோலாலம்பூர், நவ 8 – ம.இ.கா தேர்தலில் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவின் தலைமைத்துவ பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கிடையே நேரடிப் போட்டி நடைபெறவுள்ளது.
மகளிர் பிரிவுத் தலைவி பதவிக்கு மத்திய செயலவை உறுப்பினர் மோகனா முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மகளிர் பிரிவு செயலாளர் எம்.விக்னேஸ்வரி போட்டியிடுகிறார்.
அதே போல், இளைஞர் பிரிவுக்கு ம.இ.கா இளைஞர் பிரிவுத் துணைத்தலைவரான வி.முகிலனும், அவரை எதிர்த்து இளைஞர் பிரிவு பொதுச் செயலாளர் சி.சிவராஜாவும் போட்டியிடுகின்றனர்.
இன்று ம.இ.கா தலைமையகத்தில் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இதனிடையே, ம.இ.கா நடப்பு மகளிர் அணித் தலைவி பதவியை இம்முறை தற்காத்துக் கொள்ளப்போவதில்லை என்று டத்தோ கோமளா கிருஷ்ணமூர்த்தி அண்மையில் அறிவித்ததோடு மட்டுமின்றி, புதிதாக தேசியத் தலைவி பதவிக்கு நடப்பு ம.இ.கா மகளிர் துணைத் தலைவியான டத்தின் டாக்டர் பிரேமகுமாரிக்கு போட்டியிடுவார் என்று தனது ஆதரவையும் தெரிவித்தார்.
ஆனால் பிரேமகுமாரி இன்று தலைவி பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. மாறாக தான் மத்திய செயலவைக்குப் போட்டியிடப் போவதாக நமது செல்லியலுக்கு செல்பேசி வழியாகத் தகவல் தெரிவித்துள்ளார்.