பெர்லின்,பிப்.10- டாக்டர் பட்டம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ஜெர்மனி கல்வி துறை அமைச்சர், தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
ஜெர்மனியின் கல்வி மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் அனெட் சாவன். இவர் கடந்த 1980ம் ஆண்டு டஸ்சல்டோர்ப் ஹியின்ரிச் ஹின் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி ஆய்வு செய்து கட்டுரை சமர்ப்பித்தார். அதை ஆய்வு செய்த பல்கலைக்கழக குழு, அனெட்டுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. அதன்பின், ஜெர்மனியின் அரசியலில் நுழைந்து படிப்படியாக முன்னேறினார். கடந்த 2005ம் ஆண்டு முதல் கல்வி மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கு மிகவும் நெருக்கமானவர் அனெட். இந்நிலையில், அமைச்சர் அனெட், மற்றவர்களுடைய பிஎச்.டி ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து கருத்துகளை திருடி தனது போல் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் என்று இன்டர்நெட் பிளாக்கில் ஒருவர் புகார் கூறினார்.
இந்த குற்றச்சாட்டை அனெட் மறுத்தார். நான் யாருடைய கருத்தையும் காப்பி அடிக்கவில்லை என்றார். எனினும் சர்ச்சை பெரிதானதால், கடந்த செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக குழு ஆலோசனை நடத்தி, அனெட்டுக்கு வழங்கிய டாக்டர் பட்டத்தை திரும்ப பெற முடிவு செய்தது.
இதையடுத்து, தனது அமைச்சர் பதவியை அனெட் நேற்று ராஜினாமா செய்தார். இதுகுறித்து பிரதமர் ஏஞ்சலா கூறுகையில், அமைச்சராக தனது பணியை அனெட் மிக சிறப்பாக செய்து வந்தார். கனத்த இதயத்துடன் அவரது ராஜினாமாவை ஏற்கிறேன் என்றார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ராணுவ அமைச்சர் கார்ல் தியோடர் ஜு கட்டன்பர்க் என்பவரின் டாக்டர் பட்ட ஆய்வுக் கட்டுரையும் சர்ச்சையில் சிக்கியது. அதனால் அவருக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழம் வாபஸ் பெற்றது. இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது கல்வி துறை அமைச்சர் அனெட் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.