Home இந்தியா பிரபல எழுத்தாளர் ‘புஷ்பா தங்கதுரை’ காலமானார்

பிரபல எழுத்தாளர் ‘புஷ்பா தங்கதுரை’ காலமானார்

453
0
SHARE
Ad

pushpa 298-295

சென்னை, நவம்பர் 12- பிரபல எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை (82) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

‘உலா’ உள்பட ஆன்மிகம் தொடர்பான கட்டுரைகள் எழுதிய அவர், புனைப்பெயரில் விறுவிறுப்பான மர்மக்கதைகளை எழுதினார். கோயில் வரலாறு உள்பட பல விஷயங்களைக் குறித்து ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். பல விருதுகளை பெற்றுள்ளார். இவரது படைப்புகள் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

பல்வேறு தலைப்புகளில் 6 லட்சத்துக்கும் அதிகமான நூல்களை அவர் சேகரித்து வைத்திருந்தார். தனது படைப்புகளைப் பற்றி பேசும்போது, “வேணுகோபாலன் என்ற பெயரில் நான் எழுதியவையாகட்டும், புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் நான் எழுதியவையாகட்டும் எல்லாமே என்னைப் பொருத்த அளவில் சம மதிப்பையே பெற்றிருக்கின்றன” என்று குறிப்பிட்டார். அவரது படைப்புகள் ஆனந்த விகடன், கல்கி, குமுதம் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

எஸ். வேணுகோபாலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், தமிழ் இலக்கிய உலகில் ‘புஷ்பா தங்கதுரை’ என்ற புனைப் பெயரில் எழுதி வந்தார்.உடல்நலக் குறைவால், கடந்த இரண்டு வாரங்களாக ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வென்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் காலமானார். திருமணமாகாததால் இவர் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து வந்தார்.

‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ மற்றும் ‘நந்தா என் நிலா’ போன்ற இவரின் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் திரைப் படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன.