கோலாலம்பூர், நவ 13 – இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் மலேசியா சார்பாக பிரதமர் நஜிப் துன் ரசாக் பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கைகளையும், எதிர்ப்புகளையும் தாண்டி, மாநாட்டில் அவர் கலந்து கொள்ளப்போவது நேற்று உறுதியாகியுள்ளது.
மலேசியக் குழுவிற்குத் தலைமையேற்று பிரதமர் நஜிப், இலங்கை செல்கிறார் என்ற தகவலை விஸ்மா புத்ரா நேற்று வெளியிட்டது.
பிரதமரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹனிபா அமான், பிரதமர் துறையின் உயர் அதிகாரிகள், வெளியுறவுத் துறை அமைச்சின் அதிகாரிகள், அனைத்துலக வாணிப மற்றும் தொழில்துறை அதிகாரிகள், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, பொருளாதாரத் திட்டமிடல் அதிகாரிகள் ஆகியோர் இலங்கை செல்லும் குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகின்றது.
இந்த காமன்வெல்த் மாநாட்டில், உலகமய மற்றும் பொருளாதார நடப்பு பிரச்சனைகள் பற்றிய விவாதம் நடக்கவுள்ளது.
அத்துடன், பிரதமர் நஜிப்பும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஹனிபாவும் இலங்கைப் பிரதமரையும், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து இருவழிப் பேச்சுக்கள் நடத்தவுள்ளனர் என்றும் விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினால் பல அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இன்னும் நீதி கிடைக்காத நிலையில், இம்மாதம் 15 முதல் 17 ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் நஜிப் கலந்துகொள்ளக் கூடாது என்று மலேசியாவில் வாழும் தமிழர் அமைப்புகள் பல குரல் கொடுத்தன.
பக்காத்தானைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியப் பிரதமர் மற்றும் கனடா பிரதமரைப் போல் நஜிப்பும் இலங்கை மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நஜிப்பின் அமைச்சரவையைச் சேர்ந்த துணை அமைச்சரான ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூட நேற்று தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
அதே நேரத்தில், ம.இ.காவின் தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் வரும் வெள்ளிக்கிழமை இது குறித்து பிரதமரிடம் பேசுவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் இவையெல்லாம் கடந்து பிரதமர் நஜிப் இலங்கை செல்வது தற்போது உறுதியாகியுள்ளது.