ஜபல்பூர், நவம்பர் 18- ‘குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தன் அரசியல் லாபத்துக்காக நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை கூறுகிறார்,” என பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு வரும் 25ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இதில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஜபல்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது கடந்த சில மாதங்களாகவே எதிர்மறையான அரசியல் நடக்கிறது. நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி அரசியல் எதிரிகளை தாக்கி பேசுகின்றனர்; தரம் தாழ்ந்து பேசுகின்றனர்.குறிப்பாக பா.ஜ.,வில் உள்ள முக்கியமான தலைவர் ஒருவர் தன் அரசியல் லாபத்துக்காக வரலாற்றை திரித்து கூறி நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை தெரிவிக்கிறார்.
ஜனநாயக நடைமுறையை பின்பற்றுவதில் அரசியல் கட்சிகள் ஆர்வமாக இருப்பதில் தவறல்ல. ஆனால், அந்த நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக இருக்க வேண்டுமே தவிர மற்றவர்களை தாக்கி பேசுவதற்காக இருக்க கூடாது.மத்திய பிரதேசத்தில் 10 ஆண்டுகளாக பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஆனால், எந்த வளர்ச்சிப் பணியும் இங்கு சரிவர நடக்கவில்லை. பின் தங்கியுள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.இங்கே குறிபிட்தக்கது என்னவெனின் மோடியை விமர்சித்த பிரதமர், அவர் பெயரை எந்த இடத்திலும் கூறவில்லை.