கொழும்பு, நவம்பர் 27– இலங்கை பாராளுமன்றத்தில் பிரபாகரனுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் புகழாரம் சூட்டினார்.
இலங்கை பாராளுமன்ற கூட்டம் கொழும்புவில் நடந்தது. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சிவஞானம் கலந்து கொண்டு பேசினார். அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டினார்.
பாராளுமன்றத்தில் அவர், “விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் போராட்டம் நியாயமானது. அதில் தவறில்லை. அவரது பிறந்த நாள் இன்றைய தினம் அமைந்துள்ளது. மாவீரர் தினத்தில் பிரபாகரன் மற்றும் உயிரிழந்த மற்ற போராளிகளுக்கு (விடுதலைப்புலிகளுக்கு) அஞ்சலி செலுத்த வேண்டியது அவசியம். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் ஒரு சுதந்திர போராட்டமாக கருதப்பட வேண்டும்” என்று கூறினார்.
அவரது இந்த உரைக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபாகரன் தமிழ் மற்றும் சிங்கள தலைவர்களை கொலை செய்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் குற்றம் சாட்டினார்.
அமைச்சஎ வாசுதேவ நாணயக்காராவும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரபாகரன் குறித்து ஸ்ரீதரன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரையை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். எனவே பிரபாகரன் குறித்தும் மாவீரர்கள் குறித்தும் அவர் உரையாற்றிய சில பகுதிகள் நீக்கப்பட்டன.
எனவே பாராளுமன்றத்தில் ஸ்ரீதரன் நாடாளுமன்ற உறுப்பினர் பேசிய உரையின் முழு பகுதியும் இலங்கை பாராளுமன்ற இணையதளத்தில் பிரசுரிக்கப்படவில்லை.