லண்டன், நவம்பர் 27– இலங்கையில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண்டார். அப்போது, தமிழர்கள் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது, தமிழர்கள் போரின் போது பட்ட அவதிகளையும், கொடுமைகளையும், ராணுவ அத்துமீறல்களையும் கதறிய படி அவரிடம் எடுத்துரைத்தனர். காணாமல் போன தங்களது குடும்பத்தினர் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கண்ணீர் வடித்தனர்.
அதை தொடர்ந்து காமன்வெல்த் மாநாட்டில் பேசிய கேமரூன், இறுதிக்கட்ட போரின் போது நடந்த தமிழர்கள் படுகொலை குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தது. போரின் போது அத்துமீறல்கள் நடைபெறவில்லை என கூறியது.
இந்த நிலையில், தற்போது லண்டன் பத்திரிகைக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பேட்டி அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது, “நான் இலங்கையின் வடக்கு மாகாணம் சென்று திரும்பி ஒரு வாரம் ஆகவிட்டது. ஆனாலும், அங்கு பார்த்த காட்சிகள் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன. முதலில் தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான ஒளிவு மறைவற்ற சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்த போது அடுத்த மாதத்துக்குள் சர்வதேச விசாரணை தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். விசாரணை தொடங்காவிட்டால் நாங்கள் ஐ.நா. மூலமாக அத்தகைய விசாரணையை கேட்போம் என அவரிடம் தெளிவாக கூறிவிட்டேன்.
இலங்கையில் மனித உரிமை விஷயத்தில் முன்னேற்றம் வேண்டும். உண்மையான கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும். தமிழர் – சிங்களர் இடையே நல்லிணக்கம் வேண்டும்.
நான் இலங்கை சென்றதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் சென்றதால் அங்கு செய்ய வேண்டிய காரியங்களை வலியுறுத்த முடிந்தது” என டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.