கோலாலம்பூர், நவ 28 – சிலாங்கூர் மாநில அரசாங்கத் தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சம்பள உயர்வு அளித்தது குறித்து மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்வார், “இந்த சம்பள உயர்வு சற்று அதிகம் தான் என்று மந்திரி பெசாரிடம் கூறிவிட்டேன்” என்று தெரிவித்தார்.
“சம்பள உயர்வு தொடர்பாக பக்காத்தானிடமும், ஊடகங்களிடமும் அவர் விளக்கமளிக்க வேண்டும்” என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
நேற்று சிலாங்கூர் மாநில அரசாங்க தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சம்பள உயர்வு அளிப்பதாக மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் அறிவித்தார்.
அதன்படி, தனது சொந்த சம்பளத்தை மாதம் 14,175 ரிங்கிட்டில் இருந்து 29,250 ரிங்கிட்டாக உயர்த்தினார்.
மேலும் மாநிலத் தலைவர்களின் சம்பளத்தை 6,109 ரிங்கிட்டில் இருந்து 20,250 ரிங்கிட்டாகவும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 6,000 ரிங்கிட்டில் இருந்து 11,250 ரிங்கிட்டாகவும், சபாநாயகருக்கு 6,109 ரிங்கிட்டில் இருந்து 22,500 ரிங்கிட்டாகவும், துணை சபாநாயகருக்கு 3,327 ரிங்கிட்டில் இருந்து 15,750 ரிங்கிட்டாகவும் உயர்த்துவதாக காலிட் அறிவித்தார்.
இந்த சம்பள உயர்வு ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசாங்கத்தில் அவர்களின் பணி மிகவும் கடினமானதாக இருப்பதால் இந்த சம்பள உயர்வை தான் செய்வதாக காலிட் தெரிவித்தார். அதோடு வரும் ஜனவரி மாதத்தில் சம்பளத்தில் பாதியை போனஸாகவும் வழங்க காலிட் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.