Home 13வது பொதுத் தேர்தல் ம.இ.கா. தேர்தல் களம் # 1 – வாக்கு மறு எண்ணிக்கையால் பரபரப்பை ஏற்படுத்திய ...

ம.இ.கா. தேர்தல் களம் # 1 – வாக்கு மறு எண்ணிக்கையால் பரபரப்பை ஏற்படுத்திய உதவித் தலைவர் போட்டி!

690
0
SHARE
Ad

MIC-Logo-Featureடிசம்பர் 1 – இதுவரை நடந்த ம.இ.கா. தேர்தல்களிலேயே எந்த தேர்தலிலும் இத்தனை முறை வாக்குகள் மறு எண்ணிக்கை செய்யப்பட்டதில்லை. அதனால் ஏற்பட்ட உச்சகட்ட பரபரப்புதான் இந்த 2013 ம.இ.கா தேர்தல்களில் முன்னணி வகித்த ஓர் அம்சம்.

#TamilSchoolmychoice

முதலில் மத்திய செயலவை வேட்பாளருக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பிறகு தேசிய உதவித் தலைவர்களுக்கான வாக்குகள் எண்ணப்படுவது தொடங்கியது.

மத்திய செயலவைக்கான தேர்தல் முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வாய் மொழியாகவும், செல்பேசிகளில் குறுந்தகவலாகவும் பரவத் தொடங்கின.

தேசிய உதவித் தலைவருக்கான போட்டியில் முதலாவதாக டத்தோ சோதிநாதனும், இரண்டாவதாக டத்தோ சரவணனும் வென்று விட்டதாகவும், மூன்றாவதாக டத்தோ ஜஸ்பால் சிங் வென்றுவிட்டதாகவும் முதலில் தகவல்கள் கசியத் தொடங்கின.

ஆனால் அவரை அடுத்து நான்காவதாக அதிக வாக்குகள் பெற்றிருந்த ஜோகூர் டத்தோ பாலகிருஷ்ணன் இரண்டு வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்திருந்ததால் அவர் மீண்டும் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார் எனத் தெரிகின்றது.

இதனை அடுத்து மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டபோது பாலகிருஷ்ணனே மூன்றாவதாக வென்றார் என்றும் ம.இ.கா. வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், முதலாவது உதவித் தலைவர் யார் என்பதிலும் குழப்பம் ஏற்படலாம் என்பதால் சரவணனும் வாக்குகள் மறு எண்ணிக்கைக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து, மாநாட்டு மண்டபத்திற்கு வந்த தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு முதலில் மத்திய செயலவை வேட்பாளர்களில் வெற்றி பெற்றவர்களை மட்டும் அறிவித்து விட்டு, இறுதி மூன்று நிலைகளில் 544 வாக்குகளைப் பெற்றிருந்த மூன்று மத்திய செயலவை வேட்பாளர்களான கே.பி.சாமி, கெடா ஆனந்தன், கெடா எம்.எல்.மாறன் ஆகிய மூன்று பேருக்கும் இடையில் இருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக குலுக்கலை நடத்தினார். அதில் ஆனந்தன் தோல்வி அடைந்தார்.

பின்னர் உதவித் தலைவர் தேர்தல் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பேராளர்களிடத்தில் தேசிய உதவித் தலைவருக்கான முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் என பழனிவேல் அறிவித்ததால் பரபரப்பு களை கட்டியது.

மீண்டும் தேர்தல் குழுவினர் வாக்குகள் எண்ணப்படும் அறைக்கு திரும்ப, அப்போது மீண்டும் முதல் நான்கு வேட்பாளர்களான சோதிநாதன், சரவணன், பாலகிருஷ்ணன், ஜஸ்பால் சிங் ஆகியோரின் வாக்குகள் மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக, தனித் தனியாக எண்ணப்பட்டதாக ம.இ.கா. வட்டாரங்கள் தெரிவித்தன.

வாக்குகள் எண்ணப்படுவது விடியற்காலை 5.30 மணியளவில் முடிவடைந்திருக்கின்றது. முடிவில் டத்தோ சோதிநாதன் 717 வாக்குகளும், டத்தோ சரவணன் 716 வாக்குகளும், டத்தோ பாலகிருஷ்ணன் 683 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர் என அறிவிக்கப்பட்டது.

தேசிய உதவித் தலைவருக்கான வாக்குகள் எண்ணிக்கையில் ஏன் இத்தனை குளறுபடிகள், ஏன் இத்தனை முறை வாக்குகளின் எண்ணிக்கை மாறி மாறி வந்தன, என்ற கேள்விகள் பேராளர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டன.

ம.இ.கா. வரலாற்றிலேயே இவ்வளவு குழப்பங்களுடனும், குளறுபடிகளுடனும் நடைபெற்ற தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் என பேராளர்களில் பலர் பகிரங்கமாக ஆங்காங்கு கூறிக் கொண்டிருந்தனர்.

(முக்கிய குறிப்பு: மேற்காணும் செய்திக் கட்டுரை செல்லியலுக்காக அதன் ஆசிரியர் குழுவினரால் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டதாகும். இதனை செல்லியலின்  முன் அனுமதியின்றி, மற்ற பத்திரிக்கைகளோ, மற்ற இணையத் தளங்களோ பிரசுரிக்கக் கூடாது. மீறி பிரசுரித்தால், மலேசிய சட்டங்கள்படி நடவடிக்கை எடுக்கப்படும்)