Home இந்தியா சிங்கப்பூரில் தமிழர்கள் மீது அடக்குமுறை: ராமதாஸ் கண்டனம்

சிங்கப்பூரில் தமிழர்கள் மீது அடக்குமுறை: ராமதாஸ் கண்டனம்

546
0
SHARE
Ad

Ramadas_CI

சென்னை, டிசம்பர் 11- சிங்கப்பூரில் நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அடக்குமுறையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் நேற்று முன்நாள் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கு வெடித்த மிகப்பெரிய கலவரம், அடுத்த இரண்டு மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. லிட்டில் இந்தியா பகுதியில் வெடித்த கலவரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிங்கப்பூர் காவல் துறையினர் தமிழகத்தைச் சேர்ந்த  25 இந்தியர்களை கைது செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

சிங்கப்பூர் பொது அமைதிக்கு மிகவும் முக்கியத்துவம் தரும் நாடு ஆகும். பொது இடங்களில் வன்முறையோ, கலவரமோ நடக்காத அளவுக்கு சட்டம்- ஒழுங்கை சிங்கப்பூர் பாதுகாத்து வருகிறது. அப்படிப்பட்ட நாட்டில் கலவரம் வெடித்தது வருந்தத்தக்கது. சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தும் நாடு என்ற வகையில், இக்கலவரத்திற்கு காரணமானோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும் என்று தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

1965 ஆம் ஆண்டு மலேசியாவிடமிருந்து பிரிந்த போது சாதாரணமான நாடாக இருந்த சிங்கப்பூர், இன்று உலகின் பொருளாதார சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்திருப்பதற்கு தமிழர்களின் கடுமையான உழைப்பு தான் முக்கிய காரணம் ஆகும். அப்படிப்பட்ட தமிழர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவது தமிழினத்தை கடுமையாக அவமதிக்கும் செயலாகும்.

லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கலவரம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒன்றல்ல. தாறுமாறாக ஓடிய பேருந்து மோதியதால் அப்பாவி தமிழர் ஒருவர் உயிரிழந்ததால் தான் வன்முறை வெடித்தது. சிங்கப்பூரில் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாலும், பெரும்பான்மையினராக உள்ள சீனர்களின் சீண்டல்களாலும் மனம் புழுங்கிப் போயிருந்த தெற்காசியர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியது தான் கலவரம் வெடிக்கக் காரணம் ஆகும்.

தெற்காசியர்களின் மனப்புழுக்கத்திற்கு மருந்து போடாமல் இது போன்ற ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே, இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு சிங்கப்பூரில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர மீதமுள்ள அனைத்து தமிழர்களையும் விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தாமல், உடனே விடுதலை செய்வதற்கு இந்திய தூதரகம் மூலமாக மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.