Home 13வது பொதுத் தேர்தல் தேர்தலுக்குப் பின் அமைச்சரவையில் மீண்டும் ம.சீ.ச அமைச்சர்கள்?

தேர்தலுக்குப் பின் அமைச்சரவையில் மீண்டும் ம.சீ.ச அமைச்சர்கள்?

743
0
SHARE
Ad

Liow-Tiong-Lai-Sliderடிசம்பர் 11 – தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளில் அம்னோ தேர்தலும் முடிந்துவிட்டது. ம.இ.கா தேர்தலும் முடிந்து விட்டது. இனி மலேசிய சீனர் சங்க (ம.சீ.ச.) தேர்தல் மட்டும்தான் பாக்கி.

#TamilSchoolmychoice

எதிர்வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் ம.சீ.ச தேர்தலில் தலைமைப் பதவியை நடப்பு தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியோங் லாய் (படம்) எளிதாகக் கைப்பற்றுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இவரை எதிர்த்து முன்னாள் தலைவர் டத்தோ ஓங் தீ கியாட் நிற்பதால் கடுமையான போட்டி நிலவுகின்றது. கான் பிங் சியூ என்ற மூன்றாவது வேட்பாளரும் களத்தில் குதித்திருப்பதால் தேசியத் தலைவர் தேர்தல் மும்முனைப் போட்டியாக மசீசவில் உருவெடுத்திருக்கின்றது.

பதவி விலகிச் செல்லும் டத்தோ சுவா சொய் லெக் தனது ஆதரவை யாருக்குத் தெரிவிப்பார் என்பதை வைத்தே தேர்தலின் முடிவுகள் அமையும் என்ற ஓர் அரசியல் பார்வையும் நிலவுகின்றது.

இருப்பினும் லியாவ்வின் துடிப்பான, இளமையான தலைமைத்துவத்தைத்தான் பெரும்பாலான மசீச பேராளர்கள் விரும்புகின்றார்கள் என்பது பிரச்சாரங்களை வைத்துப் பார்க்கும் போது தெளிவாகப் புலப்படுகின்றது. அவருக்குத் துணையாக மற்றொரு துடிப்புமிக்க இளைஞரான வீ கா சியோங்  தேசியத் துணைத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.

இந்நிலையில் டத்தோஸ்ரீ லியாவ் வெற்றி பெற்றால், அரசாங்கத்தில் சேருவதில்லை என்ற தனது கொள்கையை விட்டுவிட்டு மசீச மீண்டும் தேசிய முன்னணியின் அமைச்சரவையில் சேர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்கத்தில் சேருவதில்லை என்ற கொள்கையை இனியும் தொடர்வது கட்சிக்கே பாதகமாக முடியும் என்ற சிந்தனையும், இந்த கொள்கையினால் அரசியல் ரீதியாக கட்சியை வளர்க்க முடியாது என்ற எண்ணமும் மசீச கட்சியினரிடையே பரவலாக ஏற்பட்டு வருவதாக பத்திரிக்கை கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்கள் இல்லாத காரணத்தால், சீன சமூகம் எதிர்நோக்கும் அரசாங்கப் பிரச்சனைகளை அரசியல் ரீதியாக தீர்த்து வைப்பதில் மசீச தலைமைத்துவம் தற்போது சிக்கல்களைச் சந்தித்து வருகின்றது.

இந்நிலை தொடர்ந்தால் நாளடைவில் மசீச தனது அடையாளத்தை இழந்து, அரசியல் முக்கியத்துவத்தை இழந்து தனித்து விடப்படும் அபாயம் நிலவுகின்றது.

டத்தோஸ்ரீ லியாவ் தலைமைத்துவம் அமைந்தால், அதன் பின்னர் மசீச சார்பாக புதிய அமைச்சர்கள் தேசிய முன்னணியின் அமைச்சரவைக்குள் நுழைவார்கள் என்பதோடு, நடந்து முடிந்த அம்னோ தேர்தலின் முடிவுகளை அடிப்படையாக வைத்து சில அம்னோ தலைவர்களும் அமைச்சரவையில் இடம்ப்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முதல் அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் நஜிப் துன் ரசாக் மேற்கொள்வார் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

மசீச அமைச்சர்கள் வருகையினால், ம.இ.கா, கெராக்கான் சார்பு அமைச்சர்கள், துணையமைச்சர்கள் சிலரின் அமைச்சு மாற்றங்களும் ஏற்படும் சாத்தியங்களும் உள்ளன,

எனவே, மசீச தலைமைத்துவப் போராட்டத்தில் யார் வெல்வார்கள் என்ற ஆர்வம் ஒரு புறம் இருக்க, அதன் பின்னர் நடைபெறப் போகும் அமைச்சரவை மாற்றங்கள் குறித்தும் ஆரூடங்கள் பெருகி வருகின்றன.

(குறிப்பு: மேற்காணும் செய்திக் கட்டுரை செல்லியலுக்காக அதன் ஆசிரியர் குழுவினரால் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டதாகும். இந்த கட்டுரையையோ, அல்லது இதன் பகுதிகளையோ செல்லியலின்  முன் அனுமதியின்றிமற்ற பத்திரிக்கைகளோமற்ற இணையத் தளங்களோ பிரசுரிக்கக் கூடாது. மீறி பிரசுரித்தால்மலேசிய சட்டங்கள்படி நடவடிக்கை எடுக்கப்படும்)