Home நாடு வீ கா சியோங் – மசீசவின் புதிய தலைவர்

வீ கா சியோங் – மசீசவின் புதிய தலைவர்

1031
0
SHARE
Ad
வீ கா சியோங்

கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) கட்சித் தேர்தலில் ஜோகூர் ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் வீ கா சியோங் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அந்தக் கட்யின் நடப்பு துணைத் தலைவருமாவார்.

கான் பிங் சியூ, இங்கூ தெக் கியோங் ஆகியோரும் தேசியத் தலைவருக்குப் போட்டியிட, மும்முனைப் போட்டியில் வீ கா சியோங் வெற்றி பெற்றிருக்கிறார்.

மசீசவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக 14-வது பொதுத் தேர்தலில் தப்பித்த வீ கா சியோங், அந்தக் கட்சியின் வரலாற்றில் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தேசியத் தலைவராகப் பதவியேற்கிறார்.

#TamilSchoolmychoice

அவருக்கு உடல் நலக்கோளாறுகள் என்ற வதந்திகள் பரவி வருவது ஒருபுறமிருக்க, கடந்த பொதுத் தேர்தலில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்த மசீசவை புனரமைத்து, கட்சிக்குள் புதிய இரத்தத்தைப் பாய்ச்சி, சீன இளைய சமுதாயத்தினருக்கு அந்தக் கட்சியின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும் மிகப் பெரிய சவால் வீ கா சியோங்குக்குக் காத்திருக்கிறது.

கடந்த பொதுத் தேர்தலில் மொத்தம் 129 தொகுதிகளில் போட்டியிட்டதில், ஒரே ஒரு நாடாளுமன்றம், இரண்டு சட்டமன்றங்கள் ஆகியவற்றில் மட்டுமே மசீச வெற்றி பெற்றது.

அதுமட்டுமல்ல! சிதைந்தும், சிதறியும் கிடக்கும் தேசிய முன்னணியில் உறுப்பியக் கட்சியாகத் தொடர்வதா அல்லது தனித்து இயங்குவதா என்ற சிக்கலான – அரசியல் வியூக முடிவையும் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கும் மசீச தள்ளப்பட்டிருக்கிறது.

சுமார் 65 விழுக்காடு பேராளர்களே கலந்து கொண்டு வாக்களித்திருக்கும் மசீச தேர்தலில், வீ கா சியோங் அணியினர் முழுமையாக அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றியிருப்பது, கட்சியைத் தொடர்ந்து ஆளுமையுடனும், ஒருமித்த சிந்தனைகளுடனும் வழிநடத்த அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

துணைத் தலைவராக மா ஹாங் சூன்

மசீசவின் துணைத் தலைவராக டாக்டர் மா ஹாங் சூன் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் வீ கா சியோங்குடன் இணைந்து போட்டியிட்டார்.

மத்திய செயற்குழுவின் 25 பதவிகளையும் வீ கா சியோங் அணியினரே கைப்பற்றியிருக்கின்றனர்.