Home வணிகம்/தொழில் நுட்பம் டைம்ஸ் ஸ்குவேர் வணிக வளாகத்தின் 20% பங்குகளை ஜோகூர் சுல்தான் வாங்கினார்!

டைம்ஸ் ஸ்குவேர் வணிக வளாகத்தின் 20% பங்குகளை ஜோகூர் சுல்தான் வாங்கினார்!

561
0
SHARE
Ad

02டிசம்பர் 11 – அண்மையக் காலமாக நேரடி வணிக முதலீடுகளில் ஈடுபட்டு வரும் ஜோகூர் சுல்தானாகிய சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார், தற்போது தலைநகர், இம்பி சாலையில் உள்ள பிரபல வணிக வளாகமான டைம்ஸ் ஸ்குவேர் நிறுவனத்தில் 20 சதவீத பங்குகளை 250 மில்லியன் ரிங்கிட் ரொக்கமாக செலுத்தி வாங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

டைம்ஸ் ஸ்குவேர் வளாகம், 12 மாடிகளைக் கொண்ட வணிக பேரங்காடி, 46 மாடிகளைக் கொண்ட தங்கும் விடுதி மற்றும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு, கேளிக்கை உல்லாச மையம், 10 மாடிகளைக் கொண்ட கார் நிறுத்துமிடம் ஆகியவற்றை ஒருங்கே உள்ளடக்கியதாகும்.

இந்த டைம்ஸ் ஸ்குவேர் வணிக வளாகம் பெர்ஜெயா டைம்ஸ் ஸ்குவேர் சென்டிரியான் பெர்ஹாட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இந்த நிறுவனத்தின் 20 சதவீதப் பங்குகளைத்தான் ஜோகூர் சுல்தான் வாங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை பிரபல கோடீஸ்வர வணிகர் டான்ஸ்ரீ வின்சென்ட் டான் வைத்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜோகூர் பாரு நகரிலுள்ள தனக்கு சொந்தமான மதிப்பு மிகுந்த 47 ஹெக்டர் நிலத்தை அண்மையில் 4.5 பில்லியன் (4500 மில்லியன்) ரிங்கிட்டுக்கு ஜோகூர் சுல்தான் ஒரு சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்றார். அதன்மூலம் கிடைத்த விற்பனைத் தொகையை பல்வேறு நிறுவனங்களில் ஜோகூர் சுல்தான் தற்போது முதலீடு செய்து வருகின்றார் என வணிகப் பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் ஜோகூர் சுல்தான், வின்சென்ட் டானை பங்குதாரராகக் கொண்ட மற்றொரு தொலைத் தொடர்பு நிறுவனமான ரெட் டோன் நெட்வொர்க் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகளையும் கையகப்படுத்தியுள்ளார்.