திருவனந்தபுரம், டிசம்பர் 11– அரபு நாடுகளில் இருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு தங்கம் கடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்கம் கடத்தி வருபவர்களும் சுங்க இலாகாவினரிடம் பிடிபட்டு வருகிறார்கள். கடந்த மாதம் கொச்சி விமான நிலையத்தில் 20 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்திய போது தங்க கடத்தலுக்கு பின்னணியாக செயல்பட்ட கோழிக்கோட்டை சேர்ந்த பயாஸ் பற்றி பல்வேறு தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து பயாஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் தங்க கடத்தலில் பல்வேறு பிரபல புள்ளிகளும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக முன்னாள் தென் இந்திய அழகி ஸ்ரவ்யாவிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் தனக்கும் பயாசுக்கும் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டார். மேலும் மலையாள நடிகை மைதிலிதான் தன்னை பயாஸ்சுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து தங்க கடத்தல் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகை மைதிலிக்கு சுங்கத்துறை அறிக்கை அனுப்பி உள்ளது.
கடந்த 2009–ம் ஆண்டு மம்முட்டி நடித்த ‘பாலேறி மாணிக்கம்’ என்ற படத்தில் அறிமுகமான நடிகை மைதிலி ஏராளமான மலையாள படங்களில் நடித்து வருகிறார். பிரபல மலையாள நடிகைக்கு தங்க கடத்தல் தொடர்பாக சுங்கத்துறை அறிக்கை விடுத்த்து மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.