Home நாடு “சிறுகதை கொச்சையாகவும், விரசமாகவும் ஆகிவிடக்கூடாது” – ஆர்.நடராஜா கண்டனம்

“சிறுகதை கொச்சையாகவும், விரசமாகவும் ஆகிவிடக்கூடாது” – ஆர்.நடராஜா கண்டனம்

900
0
SHARE
Ad

Nadajahகோலாலம்பூர், டிச 12 – அன்பு நெறியின் வடிவான காதலை எழுதும் போது கொச்சையாகவும், பச்சையாகவும், விரசமாகவும் அச்சாகும் போது அதிகரித்த காமாலையான மஞ்சளாகவும், எல்லை மீறிய எச்சரிக்கையான சிவப்பாகவும் ஆகிவிடக்கூடாது.

சிறுகதையின் இலக்கணமாவது ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். சமுதாயத்திற்கு ஒரு நல்ல படிப்பினை சொல்வதாக இருக்க வேண்டும். அச்செய்தியும் சமுதாயத்திற்கு நலம் செய்வதாக இருக்க வேண்டும்.

காமத்தின் தீமைகளை பரஞ்சோதியார் கீழ்கண்டவாறு கூறி எச்சரிக்கிறார்.

#TamilSchoolmychoice

‘காமமே கொலை கட்கு எல்லாம் காரணம் கண் ஓடாத

காமமே களவுக்கு எல்லாம் காரணம் கூற்றம் அஞ்சும்

காமமே கள் உண்டாற்கும் காரணம் ஆதலாலே

காமமே நரக பூமி காணியாகக் கொடுப்பது என்றான்’

இந்துக்கள், குறிப்பாக பெரும்பாலான கிராமத்தில் உள்ள எளிய மக்களின் வணக்கத்திற்குரிய விருப்ப தெய்வமாக இருக்கும் அன்னை மகா காளியன்னையை, தயாஜி தனது “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்” என்ற கதையில் மிகவும் தவறான கோணத்தில் ஆபாசமாக சித்தரித்துள்ளார்.

எழுத்தாளனுக்கும் கற்பு நெறி இருக்கிறது. கற்பு என்பது கற்பிக்கப்படுவது. எழுத்துலக வேசியாக இருப்பதை விட கொடிய குற்றம் ஏதுமில்லை. அதற்கு மாற்றாக எழுதாமலேயே இருந்து காலம் கழித்துவிடுவது உலகத்தவர்க்கு செய்திடும் உபகாரமாகும்.

வாசகன் தன் மனதுக்கு ஒவ்வாத ஒன்றை இலக்கியமாக அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளமாட்டான்.

தயாஜியின் சிறுகதையில், தாயை காமத்துடன் நோக்குவது, காளியம்மனை புணர்ச்சிக்கு அழைப்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருப்பது, அதற்கு விளக்கம் கேட்கும் வாசகர்களிடம் வல்லினத்தில், ‘தாய்மை புனிதமா’ என்ற தலைப்பில் பதிலளிப்பது ஆகியவற்றை பெண் எழுத்தாளர் கே.எஸ்.செண்பகவள்ளி பேஸ்புக்கில் கண்டித்து எழுதியுள்ளார்.

இந்து சமயத்திற்கும், இயற்கைக்கும் மாறான விஷயங்களைப் புகுத்தி பெண்ணினத்தையே கேவலப்படுத்தும் வகையில் தயாஜி எழுதியுள்ளதால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதை வெளீயீடு செய்வதற்குக் காரணமாக விளங்கிய சமூக வலைத்தளமான ‘வல்லினம்’ மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.இ.கா மகளிர் பிரிவுத் தலைவி மோகனா முனியாண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

இச்சிறுகதை ஒட்டுமொத்த படைப்பாளர்களையும், வாசகர்களையும் கொதிப்படையச் செய்துள்ளது. தன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திக் கொண்ட தயாஜியின் நிலை பரிதாபத்திற்குரியது என்று பாவலர் மா.தமிழன்பன் கூறியுள்ளார்.

அசிங்கத்திற்கெல்லாம் அழகு முலாம் பூசுவதா? என்று இளம்பூரணன்  கிராமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தயாஜியின் சிறுகதையை வெளியிட்டதுடன், தாய்மை மற்றும் சமய உணர்வைப் புண்படுத்தியுள்ள தவறினை நியாயப்படுத்தி பேசியமைக்காகவும் ‘வல்லினம்’ இணைய இதழின் ஆசிரியர் ம.நவீனுக்கு இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன்ஷாண்  கண்டனம் தெரிவித்துள்ள அதேநேரத்தில், மலேசிய இந்து சங்கம் எடுக்கின்ற முயற்சிகளுக்கு ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானம் தனது முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறது என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர்.நடராஜா(படம்) பத்திரிக்கைகளுக்கு வழங்கியுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.