சிங்கப்பூர் – சிங்கப்பூர் அரசாங்கத்தால் தமிழ், ஆங்கிலம், மலாய், சீனம் என நான்கு மொழிகளுக்காகவும் நடத்தப்படுவது தான் ‘Singapore writer festival’ எனப்படும் ‘சிங்கப்பூர் எழுத்தாளர் விழா’.
இந்த மாபெரும் இலக்கிய நிகழ்வு சிங்கையில் இன்று தொடங்கி நவம்பர் 8-ம் தேதி வரை, 10 நாட்களுக்கு நடைபெறும்.
இவ்விழாவில் கடந்த 1988-ம் வருடம் மலேசியாவைப் பிரதிநிதித்து முதன்முதலாக எழுத்தாளர் ராஜகுமாரன் கலந்துகொண்டார். அதன் பின்னர் 1991-ல் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு கலந்துகொண்டார்.
அதன் பின்னர், சுமார் 24 வருடங்களுக்குப் பின்னர் மலேசியாவிலிருந்து ‘வல்லினம் குழுவினர்’ இவ்விலக்கிய விழாவில் பேச அழைக்கப்பட்டுள்ளனர்.
வல்லினம் ஆசிரியரும் எழுத்தாளருமான ம.நவீன் மற்றும் வல்லினம் குழுவில் மலாய் இலக்கியங்கள் குறித்து எழுதிவரும் அ.பாண்டியன் ஆகியோர் இந்த சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் ‘இலக்கியம் வழி தேசிய அடையாளத்தை உருவாக்குவது’ என்ற தலைப்பில் பேசுகின்றனர்.
மலேசியாவின் தேசிய இலக்கியவாதியான சமாட் சைட், தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.