கோலாலம்பூர் – மை ஸ்கீல்ஸ் அறவாரியம் மற்றும் வல்லினம் இலக்கியக் குழு ஏற்பாட்டில் “மெதுநிலை மாணவர்களும் மாற்று கல்வியின் தேவையும்” எனும் நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடைபெறுகிறது.
இறுக்கமாகிவரும் கல்விச்சூழலில் மாணவர்களின் பல்வேறு ஆற்றலை அறிய மாற்றுக்கல்வி எவ்வாறெல்லாம் துணைப் புரியும் என விளக்கவும் விவாதிக்கவும் இலங்கையிலிருந்து பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களும் தமிழகத்திலிருந்து பேராசிரியர் வீ.அரசு அவர்களும் வருகையளிக்கின்றனர். மாணவர்களைத் தேர்வு முறையில் மட்டுமே அளவிடுவதால் ஏற்படும் சிக்கல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இவர்கள் உரையாற்றுவார்கள்.
பேராசிரியர் வீ.அரசு
ம.நவீன் நூல் வெளியீடு
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் ம.நவீன் எழுதிய நூல் ஒன்றும் வெளியீடு காண்கிறது. ஓர் ஆசிரியரான அவர் தற்காலக் கல்வி முறையில் உள்ள சிக்கல்களைத் தனது சுய அனுவத்திலிருந்து பகிரும் இந்த நூல் குறித்து உரையாற்ற தமிழகத்திலிருந்து கவிஞர் கலாப்ரியா அவர்கள் சிறப்பு வருகையளிக்கிறார்.
கவிஞர் கலாப்ரியா (படம்) தமிழில் மிக முக்கியமான கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணம் சஞ்சை குமாரின் ‘ஜகாட்’ எனும் மலேசியத் திரைப்படத்தின் முன்னோட்டமும் ஒளிபரப்பப்படும். சமகால கல்வி முறையால் பதிக்கப்படும் மாணவன் ஒருவனின் வாழ்வியலை கலைத்தன்மையுடன் திரைப்படமாக இயக்கியுள்ள சஞ்சை தனது அனுபவத்தையும் இந்நிகழ்வில் பகிர்ந்துகொள்வார்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு ம.நவீன் : 0163194522 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.
நிகழ்ச்சியின் விபரங்கள்:
இடம்: கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதி, கோலாலம்பூர்
நாள்: 11 அக்டோபர் 2015 (ஞாயிறு)
நேரம்: மாலை 3.30 – 5.30 வரை