Home நாடு சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட இலக்கியக் குழுவில் வல்லினம் ம.நவீன்!

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட இலக்கியக் குழுவில் வல்லினம் ம.நவீன்!

225
0
SHARE
Ad
ம.நவீன்

கோலாலம்பூர்: சீனாவின் கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சும் ஜெஜியாங் மாநிலமும் இணைந்து நவம்பர் 25 (2024) முதல் நவம்பர் 27 வரை ஏற்பாடு செய்த லியான்ஸு கலாசார கருத்தரங்கில் கலந்து கொள்ள மலேசியாவின் சார்பில் இலக்கியக் குழுவுக்கு சீன அரசாங்கத்தின் அதிகாரத்துவ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சீனா சென்ற அந்த இலக்கியக் குழுவில் வல்லினம் இலக்கியக் குழுவின் தலைவரும் நாட்டின் பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவருமான ம.நவீன் இடம் பெற்றார்.

மலேசிய இலக்கியத்தில் ஈடுபட்டுள்ள தமிழ், மலாய், சீனமொழி எழுத்தாளர்கள் சீனாவுக்கு இவ்வாறு ஒருங்கிணைந்து ஓர் அதிகாரத்துவப் பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளவும் அவர்களுக்கிடையே பண்பாட்டுப் பரிமாற்றத்தை ஏற்படுத்தவும் இந்தக் கருத்தரங்கு இரண்டாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மலேசியக் குழுவுக்கான பயணம், தங்கும் வசதி, சுற்றுலா என அனைத்து செலவினங்களுக்கும் சீன அரசே பொறுப்பேற்றிருந்தது என்றும் சீனா உள்ளிட்ட 63 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 100 அனைத்துலக கலைஞர்கள், எழுத்தாளர்கள், பல்கலைக் கழகங்கள் – கலை நிறுவனங்களின் தலைவர்கள், அமெரிக்கத் தேசிய அறிவியல் அகாடமியின் மூத்த உறுப்பினர்கள், பிரிட்டிஷ் அகாடமியின் உறுப்பினர்கள் என பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர் என நவீன் தெரிவித்தார்.

இக்கருத்தரங்கு சீனாவின் மிகத் தொன்மை நகரமான லியான்ஸு (Liangzhu), தொல்பொருள் இடிபாடுகள் உள்ள, ஜெஜியாங் மாநிலத்தின்  ஹாங்சாவ் (hangzhou) நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜெஜாங் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில்,  நவம்பர் 25ஆம் தேதி  முதல் 27ஆம் தேதி வரை இக்கருத்தரங்கு நடைபெற்றது.

‘இரண்டாவது லியான்ஸு கலாசார கருத்தரங்கு; பிற நாகரிகங்களுடன் பரஸ்பரம் அறிந்துகொள்ளுதல், மனித மேம்பாட்டின் புதிய வடிவம்’ (exchange and mutual learning for a new era of human civilization) என்ற கருப்பொருளுடன் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கின் இலக்கியக் கலந்துரையாடலில் தமிழ் மொழி சார்பில் நவீன், மலாய் மொழி எழுத்தாளர் அஸ்ரின் ஃபௌஸி (Azrin Fauzi), முனைவர் சாய் சியாவ் லிங் (DR. CHAI SIAW LING), இணை பேராசிரியர் முனைவர் ஃபன் பிக் வா (Dr. Fan Pik Wah) ஆகிய நால்வரும் பங்கு கொண்டனர்.

லியான்ஸு, யுனெஸ்கோவினால் உலக மரபுடைமைப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இடம் என்றும் யாங்சே நதியோரத்து நாகரிகமான லியான்ஸு ஆசியாவில் வரலாற்றுக்கு முந்தைய பெரிய அளவிலான குடியேற்றப் பகுதியின் சின்னமாக, மனித நாகரிகத்தின் வளர்ச்சியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க  ஆவணமாக உள்ளது என்றும் நவீன் தனது பயணம் குறித்த குறிப்பில் தெரிவித்துள்ளார். 2019-இல் லியான்ஸூவை உலக மரபுடைத்தளமாக யுனெஸ்கோ அறிவித்தது.