கோலாலம்பூர், ஜன 16 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் கங்கோங் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் வேளையில், பங்சாரில் உள்ள காபி கடையொன்று விநோதமான அறிவிப்பு ஒன்றை தனது பேஸ்புக் வலைத்தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.
ஆர்டிஸியன் காபி என்ற பெயரிலான அந்த கடையில், நாளை முதல் கீரையை கொடுத்தால் ஒரு கப் பால் இல்லாத காபி கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.
கங்கோங் குறித்து உலகளவில் தற்போது பேசப்படுவதால், இந்த குறைந்த விலை பொருளுக்கு(காய்கறி) ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று ஆர்டிஸியன் காபி தனது பேஸ்புக் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, நஜிப்பின் பேஸ்புக் பக்கம் கங்கோங் தொடர்புடைய கருத்துக்களால் நிரம்பி வழிகிறது.
அதில் பலர் கங்கோங் குறித்த காணொளிகளையும், இணைய தொடர்புகளையும் பதிவு செய்துள்ளனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று நஜிப்பின் பிரத்யேக வாசகமான “சலாம் சத்து மலேசியா” என்பதை மாற்றி “சலாம் சத்து கங்கோங்” என்று எழுதியுள்ளனர்.
இந்த கங்கோங் விவகாரம் பிபிசி (BBC) மற்றும் சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ( Singapore Straits Times) ஆகிய செய்தி ஊடகங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டு உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (12-1-14) நஜிப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “தட்பவெட்பம் காரணமாக மீன், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் விலை ஏற்றம் கண்டதற்கு அரசாங்கத்தை குறை சொல்லக்கூடாது. விலை ஏற்றம் கண்ட பொருட்களுக்கெல்லாம் அரசாங்கத்தை விமர்சிக்கும் மக்கள், கங்கோங் உள்ளிட்ட சில பொருட்களின் விலை குறைந்துள்ளது பற்றி அரசாங்கத்தை பாராட்டவில்லையே” என்று கேள்வி எழுப்பினார்.