சென்னை, ஜன 22 – கணினியில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வுகள் கண்டுபிடிக்கும் உலக அளவிலான போட்டியில் சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அமெரிக்காவின் எம்.ஐ.டி., நிறுவனம் 5 நெக்சஸ் ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன்களை பரிசாக வழங்கியுள்ளது.
சென்னை சூரப்பட்டில் உள்ள வேலம்மாள் வித்யாஸ்ரம் பள்ளியில், 10ம் வகுப்பு படிப்பவர், அர்ஜுன். இணையதளம் வடிவமைப்பு மற்றும் புதிய மென்பொருட்களை உருவாக்குவதில் அதிக ஈடுபாடு உடையவர்.
கடந்த ஆண்டு டிசம்பரில், அமெரிக்காவின் முன்னணி கல்வி நிறுவனமான, மசாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்.ஐ.டி.,), கணினியில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வை கண்டுபிடிக்கும் போட்டியை, உலகளாவிய அளவில் நடத்தியது. இப்போட்டியில் அர்ஜூன் முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இதே எம்.ஐ.டி., நிறுவனம், 2012ல் நடத்திய போட்டி ஒன்றிலும் பங்கேற்ற அர்ஜூன், பள்ளி வாகனங்களை பெற்றோர் வீட்டில் இருந்தபடியே கண்காணிக்கும் ஆண்டிராய்டு தொழில்நுட்பம் கொண்ட போனை வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.