Home நாடு ‘செல்லியல் சந்திப்பு’ டான்ஸ்ரீ க.குமரன் தலைமையில் பிரபல இலங்கை பத்திரிகையாளர் முர்ஷிதீன் உரையும் கலந்துரையாடலும்

‘செல்லியல் சந்திப்பு’ டான்ஸ்ரீ க.குமரன் தலைமையில் பிரபல இலங்கை பத்திரிகையாளர் முர்ஷிதீன் உரையும் கலந்துரையாடலும்

816
0
SHARE
Ad

Icon-512@2xகோலாலம்பூர், பிப் 3 – இலங்கையின் பிரபல ஆங்கில, தமிழ் தகவல் ஊடகங்களின் பத்திரிக்கையாளரும், பிரபல எழுத்தாளருமான முர்ஷிதீன் அவர்களுடனான சந்திப்புக் கூட்டம் ஒன்றை ‘செல்லியல் சந்திப்பு’ என்ற நிகழ்வாக, செல்லியல் தகவல் ஊடகம் ஏற்பாடு செய்துள்ளது.

முன்னாள் துணையமைச்சரான டான்ஸ்ரீ க.குமரன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வு எதிர்வரும் 4 பிப்ரவரி 2014ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணி முதல் தலைநகர் ஜாலான் ஈப்போவிலுள்ள கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் (டைனாஸ்டி தங்கும் விடுதிக்கு அருகில்) சிற்றுண்டியுடன் நடைபெறும்.

தனிப்பட்ட வருகையொன்றை மேற்கொண்டு மலேசியா வந்திருக்கும் முர்ஷிதீன் மனித உரிமை விவகாரங்களிலும் ஆர்வம் கொண்டவராவார்.  அவரது பத்திரிக்கை மற்றும் எழுத்துத் துறை அனுபவங்களை மலேசிய எழுத்தாளர்களும், வாசகர்களும் பகிர்ந்து கொள்ளும் வகையில் அவரது உரையையும், அவருடனான கலந்துரையாலையும் கொண்ட இந்த “செல்லியல் சந்திப்பு” நிகழ்ச்சியை ‘செல்லியல்’ ஏற்பாடு  செய்துள்ளது.

#TamilSchoolmychoice

இலங்கையின் தற்போதைய தமிழ் இலக்கிய வளர்ச்சி, பத்திரிக்கைத் துறை நிலவரம், அந்த நாட்டின் அரசியல், பொருளாதார, சுற்றுப் பயணத் துறை சூழல்கள் போன்றவற்றை அந்த நாட்டுப் பத்திரிக்கையாளர் ஒருவரின் பார்வையில் விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை செல்லியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேல்விவரங்களுக்கு editor@selliyal.com அல்லது செல்பேசி 012-2326967.

முர்ஷிதீன் பின்னணிMURSHIDEEN PHOTO

இலங்கை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான, படூர்டீன் முகமட் முர்ஷிதீன் என்ற முழுப் பெயரைக் கொண்ட முர்ஷிதீன்

கொழும்புவைப் பிறப்பிடமாககொண்டவர்.

1979ம்ஆண்டிலிருந்து  கவிதைகளோடு கைகுலுக்க ஆரம்பித்த இவரது இலக்கியப் பயணம் இன்றுவரை பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சி என பல பரிமாணங்களில் விரிந்து, ஒரு சமுதாயக் கண்ணோட்டம் கொண்ட ஓர் எழுத்தாளனாக “இளநெஞ்சன்” முர்ஷிதீன் என்ற பெயரில் அவர் எழுத்துலகில் பயணித்து வருகின்றார்.

சிங்களம், தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் புலமை பெற்ற இவர் பேராதனை பல்கலைகழகத்தின் கலைத்துறைப் பட்டதாரி ஆவார். திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் டிப்ளோமா பட்டமும், ஆஸ்திரேலியாவில் சர்வதேச விவகாரங்களுக்கான பட்டப் படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.

தினபதி, சிந்தாமணி, பத்திரிகையின் உதவியாசிரியராக பொறுப்பு வகித்துள்ள இவர் தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களிலும் செய்தி ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார்.

பி.எம்.முர்ஷிதீன் என்ற பெயரில் ஆங்கிலத் தகவல் ஊடகங்களிலும் இவர் பிரபலமானவர். இலங்கையில் இன்று பிரபலமாக விளங்கும் ‘தமிழ் மிர்ரர்’ என்ற தமிழ் இணைய செய்தித் தளம் தொடங்கப்பட்ட போது, அதன் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்.

தனது தொழில் காரணமாகவும், மாநாடுகளில் கலந்து கொள்வதற்காகவும் பல உலக நாடுகளுக்கு முர்ஷிதீன் பயணம் செய்திருக்கின்றார்.

இவரது முதலாவது நூல் வெளியீடாகிய ‘இஸ்லாமிய கீதங்கள்” 1986ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின்னர்  ‘ஒருவாசகனின் வாசகங்கள்’ கவிதை நூலையும்,  ‘சமுதாய அகதிகள்’ சிறுகதை நூலையும், ‘சமாதான யாசகங்கள்’ , ‘மிலேனியம் கனவுகள்’ என்ற கவிதை நூல்களையும் தனது பங்களிப்பாக இலக்கிய உலகுக்குத்  தந்துள்ளார்.

எழுத்துக்களால் மட்டும்  சமூக முன்னேற்றம் பற்றி பேசிக் கொண்டிருக்காமல், சமுதாய முன்னேற்ற செயல் நடவடிக்கைகளிலும் நேரடியாக ஈடுபட்டு தன்னாலியன்ற பங்களிப்பை செய்து வருகின்றார்.