பாரிஸ், பிப் 5 – தலைநகர் பாரிஸ் மற்றும் லியோன் ஆகிய நகரங்களில் அதிபர் பிராங்கோயிசை கண்டித்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர். பிரான்சில் ஓரின சேர்க்கையாளர் திருமணம் மற்றும் கருக்கலைப்புக்கான கட்டுப்பாடு தளர்வுகளை எதிர்த்து இப்போராட்டத்தை நடத்தினர் .
லியோன் நகரத்தில் நடைபெற்ற பேரணியில் பஸ்களிலும், வாகனங்களிலும் வந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்ட் அரசு, சமீபத்தில் கருக்கலைப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
அத்துடன் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டத்தையும் கொண்டு வந்தது. இதற்கு பிரான்சில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குடும்ப அமைப்பின் மீதுள்ள வெறுப்பால் அதிபர் சட்டங்களை மாற்றி உள்ளார் என்று மக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நாம் ஒரு சமுதாயமாக வாழ்ந்து வருகிறோம். அதற்கு அஸ்திவாரமாக குடும்பம்தான் திகழ்கிறது. குடும்ப அமைப்பை தற்போது இழந்து வருகிறோம் என்று போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், இந்த சட்டரீதியான தாக்குதல் குடும்பங்களுக்கு எதிரானது, குழந்தைகளுக்கு எதிரானது, நாட்டுக்கே எதிரானது என்று கோஷமிட்டனர்