கோலாலம்பூர், பிப் 18 – மலேசியாவில் தற்போது நிறைய இளம் இயக்குநர்களும், ஒளிப்பதிவாளர்களும் உருவாகி, பல வித்தியாசமான குறும்படங்களையும், டெலிமூவிக்களையும் இயக்கி வருகின்றனர். மலேசியத் திரைப்படங்களின் தரம் நாளுக்கு நாளுக்கு உயர்ந்து வருகின்றது என்பதற்கு இவர்கள் முன்னோடிகளாக விளங்குகின்றனர்.
அண்மையில் வெளியிடப்பட்ட கார்த்திக் ஷாமளனின் மெல்லத் திறந்தது கதவு, விமலா பெருமாளின் வெட்டிப்பசங்க போன்ற படங்கள் மலேசிய ரசிகர்களிடையே மலேசியப் படங்களின் மீது இருந்த அதிருப்தியை போக்கி, வசூல் ரீதியாகவும் நிறைய வெற்றியை கொடுத்தது.
இந்நிலையில், இளம் இயக்குநர் விக்னேஷ் லோகராஜ் அசோகன் (படம்) இயக்கத்தில், ராயன் மனோகரன் ஒளிப்பதிவில், வினேஷ் குமார் இசையில், பாடலாசியர் ஓவியா ஆகியோர் கூட்டணியில் புதிதாக வெளிவந்திருக்கும் குறும்படம் ‘அறிந்தும் அறியாமலும்’.
இந்த குறும்படத்தில் விடேஸ் மித்ரா, நந்தினி மனோ, ஷோபா முருகேசு, கணேசா சிபி ஆகிய அறிமுக நடிகர்கள் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நட்பிற்கும், காதலுக்கும் உள்ள வித்தியாசத்தையும், அதை இன்றைய இளம் தலைமுறையினர் எப்படி தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பதையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நடிப்பில் ஒரு சில இடங்களில் தொய்வு தெரிந்தாலும், சொல்ல வந்த கருத்தை சில நிமிடங்களில் மிகச் சிறப்பாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்தியுள்ளது இக்குறும்படம். இந்த கூட்டணிக்கு செல்லியலின் மனமார்ந்த வாழ்த்துகள்…
– பீனிக்ஸ்தாசன்
யூடியுப்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள இக்குறும்படத்தை கீழே காணலாம்.