Home கலை உலகம் முதல்நாள் திரைவிமர்சனம்: ‘பிரம்மன்’ – சசிகுமாரின் இன்னொரு கோண நட்புப் பரிமாணம்! நகைச்சுவைத் தோரணம்!

முதல்நாள் திரைவிமர்சனம்: ‘பிரம்மன்’ – சசிகுமாரின் இன்னொரு கோண நட்புப் பரிமாணம்! நகைச்சுவைத் தோரணம்!

652
0
SHARE
Ad

Bramman_movie_stills_08பிப்ரவரி 21 – ஒட்ட வெட்டிய முடி, வெட்டாமல் விட்ட தாடி என, மிகச் சாதாரண தோற்றத்துடன், திறமையை மட்டும் மூலதனமாக வைத்து,  திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும் முன்னணிக்கு வந்தவர் சசிகுமார்.

#TamilSchoolmychoice

அவரது முதல் படம் சுப்பிரமணியபுரம்” படத்தில் நட்பின் ஒரு கோணத்தைக் காட்டி வெற்றி பெற்றவர் தொடர்ந்து தனது ஒவ்வொரு படத்திலும் நட்பின் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டி அவற்றையும் வெற்றிப் படங்களாக மாற்றிக் காட்டியிருக்கின்றார்.

அந்த வரிசையில் “பிரம்மன்” படத்திலும் தனது பால்ய நண்பனுக்காக -அவனது வெற்றிக்காக தனது புகழையும் ஏன் காதலியையும் கூட தியாகம் செய்யும் சிறந்த நண்பனாக வந்து மீண்டும் வெற்றிக் கொடி நாட்டியிருக்கின்றார் சசிகுமார்.

படத்தின் கதை

நவீன யுகத்தில் தமிழகத்தின் ஊர்களில் – அந்த ஊரின் மக்களோடும் வாழ்க்கையோடும் இரண்டறக் கலந்துவிட்ட திரையரங்கங்களின் சோக முடிவு ஏற்கனவே வெயில் படத்தில் விரிவாகக் காட்டப்பட்ட ஒன்றுதான் என்றாலும் இந்தப் படத்திலும் அப்படிப்பட்ட ஒரு திரையரங்கத்தைப் பின்னணியில் வைத்து நகைச்சுவைத் தோரணங்களைக் கட்டியிருக்கின்றார்கள்.

கூடவே சந்தானத்தின் கலாய்ப்பும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா? சசிகுமாரும் சந்தானமும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் – அதோடு சேர்ந்து வளரும் சசிகுமாரின் காதல், அவரது குடும்பப் பின்னணி, தங்கை பாசம், தங்கையின் காதல் என முதல் பாதித் திரைக்கதை விரிகின்றது.

இரண்டாவது பாதியில், வரி கட்ட முடியாமல் மூடப்படும் நிலைமைக்கு ஆளாகும் திரையரங்கைக் காப்பாற்ற சென்னைக்கு படையெடுக்கின்றார் சசிகுமார். அந்தத் திரையரங்கை வைத்து சினிமா கற்று, புகழ் பெற்ற சினிமா இயக்குநராக விளங்கும் தனது பால்ய நண்பனைப் பார்த்து உதவி கேட்க முயற்சிகள் எடுக்கின்றார்.

பிரிந்து போன தனது பால்ய நண்பனைக் கண்டுபிடிக்கும் சசிகுமார், ஏற்கனவே புகழின் உச்சத்தில் திரைப்பட இயக்குநராக இருக்கும் அவனுக்குத் தெரியாமலேயே அவன் மேலும் புகழ் பெறவும் வாழ்க்கையில் முன்னேறவும் உதவிகள் புரிகின்றார். இந்த இடத்தில்தான் இயக்குநரின் மாறுபட்ட சிந்தனையோடு திரைக்கதையும் சூடுபிடிக்கின்றது.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நண்பனிடம் தன்னை யாரென்று சொல்லாமலேயே அவனுக்கென்று சில தியாகங்கள் செய்கின்றார் சசிகுமார். இறுதியில் தனது காதலியையே தியாகம் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போது அவரது முடிவு என்ன, அவரது நண்பன் அவரை எப்படிக் அடையாளம் கண்டு கொள்கின்றான் என்பதையெல்லாம் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

முக்கால் வாசிப் படத்திற்குப் பின்னர் சசிகுமாரின் வழக்கமான நட்பு முகத்திற்கு இன்னொரு கோணத்தில் இயக்குநர் சாக்ரடீஸ், திரைக்கதை வடிவம் கொடுத்து பாராட்டு பெறுகின்றார்.

படத்தின் பலம்Bramman_movie_stills_06

சென்னை செல்லும் சசிகுமாருக்குப் பொருத்தமான நண்பன் கதாபாத்திரமாக, துணை இயக்குநராக வாய்ப்பு தேடி அலையும் சூரியைப் பொருத்தி படத்தின் பின்பாதியிலும் நகைச்சுவைப் பகுதிக்கு சாமர்த்தியமாக செழுமையேற்றியிருக்கின்றார் இயக்குநர் சாக்ரடீஸ்.

சந்தானத்துக்கு இணையான நகைச்சுவையை தனது சினிமா அலம்பல்கள் மூலம் காட்டியிருக்கின்றார் சூரி. ஆனால் சந்தானமும் சூரியும் சந்திப்பது போன்ற காட்சிகள் இறுதிவரையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதாநாயகி லாவண்யா திரிபாதி, முன்னாள் உத்தரகாண்ட் மாநில அழகியாக அழகிப் போட்டியில் வெற்றி பெற்றவராம். அதனால் அழகாகவும் இருக்கின்றார். டப்பிங் குரல் என்பது தெளிவாகத் தெரிகின்றது. தொடர்ந்து கவனம் செலுத்தினால் வாய்ப்புகள் கிடைக்கலாம்.

பால்ய நண்பனாக வரும் புதுமுகம் நவீன் சந்திராவும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கின்றார்.

படத்தின் முன்பாதியில் வரும் சசிகுமாரின் தங்கையின் காதல் படலமும் சிரிப்பை வரவழைக்கின்றது. நெக்லஸ் பார்த்ததும் தங்கை மனம் மாறுவதும், தாலி கட்டும் நேரத்தில் அபூர்வ ராகங்கள் ரஜினிகாந்த் பாணியில் பழைய காதலன் திருமண மண்டபத்தில் நுழைவதும் கலகலப்பூட்டுகின்றது. ஏதோ பரபரப்பாக நடைபெறப் போகின்றது என எதிர்பார்த்தால் அதையும் நகைச்சுவையாக முடித்து வைத்திருக்கின்றார் இயக்குநர்.

படத்தின் பின்பாதியில் காட்டப்படும் சினிமா தயாரிப்பு காட்சிகள் யதார்த்தத்தோடு படமாக்கப்பட்டிருக்கின்றது. சசிகுமாரின் சினிமாக் கதையை தயாரிப்பாளர்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது இயக்குநரின் திறமைக்கு சான்று.

Bramman_movie_stills_03படத்தின் பலவீனங்கள்

சசிகுமாரை சில காட்சிகளில் வழக்கமான ஹீரோவாகவும், வெளிநாட்டுப் பாடல்களோடும் காட்ட முற்பட்டிருப்பது செயற்கைத் தனமான திணிப்பாகத் தெரிகின்றது. கதையோடும் ஒட்டவில்லை.

பாடல் காட்சிகளில் சசிகுமாரை, அவரது காலணி, முகம் என தனித்தனியாக  ஹீரோத்தனமாக காட்ட முற்பட்டிருக்க வேண்டியதில்லை. அப்படியெல்லாம் காட்டப்படாமலேயே முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் அவர் என்பதை அவரும் அவரை வைத்து இயக்குபவர்களும் மறந்துவிடாமல் இருப்பது நல்லது.

வெளிநாட்டு பனிப்பிரதேச பாடல்களில் கூட சசிகுமாரோடு நான்கு ஆண்கள் ஆடுவதை இன்னும் எத்தனை படங்களில் காட்டிக் கொண்டிருக்கப் போகிறார்களோ? சசிகுமார் நீங்களுமா?

முதல் காட்சிகளில் சில கதாபாத்திரங்கள் பற்றியும், சில சம்பவங்கள் பற்றியும் சசிகுமார் விவரிப்பது போரடிப்பதோடு, ஏற்கனவே அவை பல படங்களில் நாம் பார்த்த காட்சிகளாகவும் இருக்கின்றன.

திரையரங்கை வாடகைக்கு எடுத்து வெற்றிகாண முயலும் சசிகுமாரை தந்தையாக வரும் பட்டிமன்றம் புகழ் கு.ஞானசம்பந்தன் பாராட்டாமல் ஒவ்வொரு காட்சியிலும் திட்டுவதும் பொருத்தமானதாக இல்லை.

படத்தின் சண்டைக் காட்சிகள் கூட வேண்டுமென்றே திணிக்கப்பட்டதுபோல் தெரிகின்றன. அதிலும் ஆந்திராவில் சசிகுமார் நண்பர்களோடு தெலுங்குப் படம் பார்க்கும் போது ஏற்படும் சர்ச்சையால் இடம்பெறும் சண்டை தேவையில்லாத திணிப்பு.

படத்தின் தலைப்பு பொருத்தமில்லாத ஒன்று என்றாலும், அதனை வலுக்கட்டாயமாக இறுதிக்காட்சியில் சசிகுமாரின் நண்பன் கூறுவதாக அமைத்திருப்பதிலும் செயற்கைத்தனம் மிளிர்கின்றது.

படத்தின் மற்ற சிறப்பம்சங்கள்Bramman_movie_stills_05

கொஞ்ச காலம் காணாமல் போன பத்மப் பிரியா ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக, பெருத்த உடம்புடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.

சில வித்தியாச நகைச்சுவைகள் குபீர் சிரிப்பை வரவழைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கல்லூரி விரிவுரையாளரிடமே விளக்கம் சொல்லி சசிகுமார் காதல் கடிதம் கொடுப்பது ரசிக்கும்படி இருக்கின்றது. அழகான விரிவுரையாளரிடம் சந்தானமும் கடிதம் கொடுப்பதும் நல்ல கலாய்ப்பு.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையமைப்பு தெலுங்குப் படத்தை ஞாபகப்படுத்துகின்றது. சில பாடல்களில் சசிகுமாருக்கு பொருந்தாத பின்னணிப் பாடகரைப் போட்டுப் பரிட்சை செய்து பார்த்திருக்கின்றார்கள்.

இருந்தாலும், தொடர்ந்து நட்பின் பல்வகைப் பரிமாணங்களைத் தனது திரைப்படங்களில் பரிமாறி வரும் சசிகுமாருக்காகவும், வித்தியாச திரைக்கதைக்காகவும், நகைச்சுவைக் காட்சிகளுக்காகவும் பிரம்மனை தைரியமாக திரையரங்குக்குச் சென்று பார்க்கலாம்!

-இரா.முத்தரசன்