Home நாடு “பழனிவேலுவிடம் குறை கண்டுபிடிப்பதை விட்டு விட்டு கட்சி, சமுதாயப் பணிகளில் கவனம் செலுத்துங்கள்” – ஹென்ரி...

“பழனிவேலுவிடம் குறை கண்டுபிடிப்பதை விட்டு விட்டு கட்சி, சமுதாயப் பணிகளில் கவனம் செலுத்துங்கள்” – ஹென்ரி அறைகூவல்

536
0
SHARE
Ad

Henryபிப்ரவரி 21 – கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் என்ன செய்கின்றார், என்ன பேசுகின்றார் என்பதையே தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டு, அதில் வெறும் குறைபாடுகளையும் குற்றங்களையும் மட்டுமே கண்டுபிடித்து, அதைப் பத்திரிக்கை அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் போக்கை ம.இ.கா தலைவர்கள் குறிப்பாக இளைய தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ம.இ.கா பினாங்கு மாநில தொடர்புக் குழுவின் பொருளாளரும், ம.இ.கா பாகான் தொகுதித் தலைவருமான டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் அறைகூவல் விடுத்துள்ளார்.

“பழனிவேல் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பத்திரிக்கை அறிக்கைத் தாக்குதல்கள் அதிலும் நமது ம.இ.கா கட்சியினரே அத்தகைய அறிக்கைகளை விடுத்து வருவது, நமது கட்சியின் தோற்றத்தையும் நமது தேசியத் தலைவரின் தலைமைத்துவத்தையும் பெரிதும் களங்கப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியினரும் மற்ற பொதுமக்களும் நமக்குள் நடக்கும் கட்சிப் போராட்டத்தை வேடிக்கையாகவும், அதே சமயத்தில் வெறுப்புடனும் பார்த்து வருகின்றனர். எனவே, நாம் கட்சியைப் பலப்படுத்த வேண்டிய பணிகளிலும், இந்திய சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் சேவைகளிலும் ஈடுபட வேண்டிய நேரத்தில் நமது தேசியத் தலைவரையே குற்றம் கண்டுபிடித்து குறை சொல்லும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் டத்தோ ஹென்ரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பழனிவேலுவுக்கும் வாய்ப்பளிப்போம்

#TamilSchoolmychoice

பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“பெரும் சமூகப் பிரச்சனைகளைக் கொண்டுள்ள இந்திய சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் ம.இ.கா போன்ற ஒரு கட்சியை வழி நடத்திக் கொண்டு, அதே சமயத்தில் அமைச்சுப் பொறுப்பிலும், நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலும் இருந்து கொண்டு அனைவரையும் திருப்திப்படுத்தும் வண்ணம் நடந்து கொள்வது என்பது எந்த தலைவராலும் முடியாத ஒன்றாகும். அதிலும் கடந்த கால தேசியத் தலைவருக்கு இருந்த வசதியான அரசியல் சூழ்நிலை இன்றைக்கு பழனிவேலுவுக்கு இல்லை.”

“எதிர்க்கட்சிகள் மேலும் அதிகமான தொகுதிகளை வென்று, கூடுதலான அரசியல் ஆதிக்கத்தோடு, தேசிய முன்னணிக்குக் கடுமையான சவால்களை விடுத்து வரும் இன்றைய சூழ்நிலையில் பழனிவேலுவும் தன்னால் இயன்ற வரையில் தனது பணிகளை ஆற்றி வருகின்றார் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது”

“ம.இ.கா தலைவர்கள் தைரியமாக தங்களின் மனதில் பட்டதைப் பேசுவதற்கும், பத்திரிக்கைகளின் வழி அறிக்கை விடுவதற்கும் பழனிவேலு கட்சியில் அதிகமான சுதந்திரம் தந்திருக்கின்றார். உன்னை முடித்து விடுவேன், கட்சியில் இருந்து தூக்கி விடுவேன் என்றெல்லாம் மிரட்டுகின்ற பாணியையும் அவர் கையாள்வதில்லை. ஆனால் அதை வைத்து அவர் பலவீனமானவர் என்றும், கட்சியில் ஆதரவு இல்லாதவர் என்றும் யாரும் கருதிவிடக்கூடாது”

90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆதரவைப் பெற்றவர்

“பழனிவேல் கட்சியில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ம.இ.கா கிளைகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஏகமனதாக தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதையும் நாம் யாரும் மறந்துவிடக்கூடாது. இந்த தவணைக்கு அவர்தான் தேசியத் தலைவர் என்று நாமே தேர்ந்தெடுத்து வைத்துவிட்டு, அவருக்குரிய மதிப்பைத் தராமல், அவருக்குக் கிடைக்க வேண்டிய ஆதரவைத் தராமல் போனால், நமது கட்சிதான் பலம் இழக்கும் என்பதையும் ஏனோ நாம் மறந்து விடுகின்றோம்”

“அவர் சொல்லுகின்ற சில கருத்துக்களை, சில எச்சரிக்கைகளை முழுமையாகப் பார்க்காமல், எந்த கண்ணோட்டத்தில் சொல்லுகின்றார், எந்த நோக்கத்தில் சொல்லுகின்றார் என்பது குறித்து விளக்கம் அளிக்காமல், புரிந்து கொள்ளாமல், அவர் கூறுகின்ற ஓரிரு வாக்கியத்தை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு அவரைத் தாக்கி அறிக்கை விடுவதும், பரபரப்பான பத்திரிக்கைச் செய்திகளாக உருவாக்குவதும் நியாயமானது அல்ல”

“எனவே, இனியும் பழனிவேல் மேலான குற்றம் குறைகளை மட்டும் கண்டுபிடிப்பதை விட்டு விட்டு, அவர் ஆற்றி வரும் சாதகமான பணிகளுக்கு மதிப்பளித்து, அவரது கட்சித் தலைமைக்கு நாம் தொடர்ந்து ஆதரவு வழங்கி வர வேண்டும். அவரது பதவிக்காலத்தில் அவர் செய்ய நினைக்கின்ற செயல்களை அவர் செய்து முடிக்க அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்போதுதான் நமது கட்சியின் பெருமையும் பாரம்பரியமும் பாதுகாக்கப்படும்”

-இவ்வாறு டத்தோ ஹென்ரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.