மும்பை, ஏப். 4- கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ந் தேதி மும்பை சக்தி மில் வளாகத்தில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு மு \ம்பாய் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் கடந்த ஆண்டு தனது நண்பருடன், நகரின் மையப்பகுதியில் செயல்படாமல் இருந்த சக்தி மில்வளாகத்திற்கு புகைப்படம் எடுக்கச் சென்றார்.
அப்போது அந்த பெண் பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றபோது, அதே சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி அலுவலகம் ஒன்றில் தொலைபேசித் தொடர்புகளை இயக்கும் 18 வயது பெண் ஒருவரை ஒரு கும்பல் பலாத்காரம் செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த இரண்டு வழக்குகளின் விசாரணையும் மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு வழக்கிலும் தலா ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இவர்களில் 3 குற்றவாளிகள் இரு வழக்கிலும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
இதில், சக்தி மில் வளாகத்தில் தொலைபேசி அலுவலரை பலாத்காரம் செய்த வழக்கில் 4 பேருக்கு கடந்த மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.தற்போது பெண் பத்திரிகையாளர் கற்பழிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையும் முடிவடைந்த நிலையில், இதில் விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி மற்றும் சலிம்அன்சாரி ஆகியோர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் ஏற்கனவே, முந்தைய வழக்கிலும் தண்டனை பெற்றவர்கள். இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அப்போது, தொடர்ந்து கொடிய குற்றம் செய்த 3 குற்றவாளிகளுக்கும், புதிதாக கொண்டு வரப்பட்ட 376-இ சட்டப்பிரிவின் கீழ் மரண தண்டனை வழங்குவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
கடந்த ஆண்டு நிகழ்ந்த பாலியல் பலாத்காரச் சம்பவங்களின் காரணமாக அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட இந்தசட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இதுவாகும்.