பெட்டாலிங்ஜெயா, ஏப்ரல் 10- மஇகா கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் இரண்டு துணையமைச்சர்களும் தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளின் விரிவான அறிக்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
மலேசிய இந்திய சமூகம், உதவிகள் வழங்கப்படும் போது ஓரங்கட்டப் படவில்லை என்பதை அந்த இரண்டு அமைச்சர்களும் துணையமைச்சர்களும் உறுதிபடுத்த வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார்.
அவர்கள் இந்திய சமூகத்திற்காக என்ன செய்திருக்கிறார்கள், அந்த சமுதாயத்திற்காக இன்னும் என்ன செய்ய வேண்டும் ஆகியவை தொடர்பான அறிக்கைகளையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டுமென பிரதமர் விரும்புகிறார். இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடும்போதும் அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
மஇகா தலைவர்கள் அதிக சிரத்தை காட்ட வேண்டிய பகுதிகளையும் நஜிப் பிரித்து கொடுத்திருக்கிறார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மஇகா இரண்டு அமைச்சர் பதவிகளையும் இரண்டு துணையமைச்சர் பதவிகளையும் அரசாங்கத்தில் வகிக்கிறது. கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இயற்கைவள, சுற்றுச்சூழல் அமைச்சராகவும், தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் சுகாதார அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்கள்.
கட்சியின் உதவித் தலைவர் டத்தோ எம். சரவணன் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சராகவும் மஇகா மத்திய செயலவை உறுப்பினர் பி.கமலநாதன் கல்வி துணையமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார்கள்.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர், இந்திய விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூடிய போது, இந்திய சமூகத்திற்கு உதவ அந்த நான்கு தலைவர்களிடமும் நஜிப் சிறப்பு பொறுப்புகளை ஒப்படைத்தார்.
ஒதுக்கப்படும் நிதிகள் சேர வேண்டிய இடத்தை அடைந்துவிட்டனவா என்பது மீதும் நஜிப் அக்கறை காட்டுவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
தீர்வு காணப்படாத 20 -க்கும் மேற்பட்ட பிரச்சனைகளை கடந்த கூட்டத்தில் பிரதமர் எழுப்பியபோது அவர்கள் நால்வரும் அதிர்ச்சியடைந்தனர். நஜீப் தமது பணியை செய்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. பின்னர் அந்த மஇகா தலைவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பணிகளை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டனர். அவர்கள் இப்போது புகார் கூற முடியாது. அவர்கள் முதலில் தங்களுடைய பணியை ஆற்ற வேண்டும். சாதனைகளை காட்ட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.