புதுடெல்லி, ஏப்ரல் 11 – பாலியல் பலாத்கார குற்ற வழக்கில் மரண தண்டனை விதிப்பதற்கு, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த, பெண் பத்திரிகையாளர் பாலியல் பலாத்கார வழக்கு மற்றும் வேறொரு பலாத்கார வழக்கிலும் சம்மந்தப்பட்ட மூன்று வாலிபர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் மொரதாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது ‘பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபட்டவர்களை தூக்கிலிடக் கூடாது.
பலாத்கார குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை எங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், மாற்றும். பலாத்கார குற்றத்திற்கு தூக்கிலிட்டுத்தான் தண்டிக்க வேண்டுமா? தவறு செய்துள்ளவர்கள் இளைஞர்கள். இளைஞர்கள் தவறு செய்வார்கள்.
பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான சட்டத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.
இளைஞர்களும், இளம்பெண்களும் காதலிக்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிய நேரிடுகிறது. அதனால் அவர்களின் நட்பு முடிவுக்கு வருகிறது. இதன் பின்னர், இளம்பெண் புகார் செய்கிறார்.
தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்த புகாரில் குறிப்பிடுகிறார். எனவே பலாத்கார குற்றத்திற்கான எதிரான சட்டத்தை திருத்த வேண்டும் என்று முலாயம்சிங் வலியுறுத்தினார். இந்நிலையில், முலாயமின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கிரண்பேடி கூறுகையில், ‘முலாயம் சிங்கின் பேச்சு பெண்களுக்கு எதிரானது மட்டுமல்ல, சமுதாயத்திற்கு எதிரானதும் கூட. இத்தகைய மனிதர்களை ஓட்டு போடாமல் தண்டிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி கூறுகையில், ‘பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது எந்தவித தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது.