இஸ்லாமாபாத், ஏப்ரல் 23 – பாகிஸ்தானின் மூத்த தொலைகாட்சி பத்திரிகையாளர் ஹமீத் மிர் (படம்). இவர் ஜியோ தொலைக்காட்சியில் பணிபுரிகிறார். இவருக்கு ஏற்கனவே தலிபான் தீவிரவாதிகளிடம் இருந்து தொடர் கொலை மிரட்டல் இருந்துள்ளது.
இதற்கிடையே, கராச்சி விமான நிலையத்தின் அருகே உள்ள தனது அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த போது தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் மீது நடந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் பத்திரிகையாளர்கள், வக்கீல்கள் மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர். இஸ்லாமாபாத் மற்றம் ராவல்பிண்டியில் கண்டன ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. அதில், பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். ஹமீது மிர் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டன.
சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் அதிகம் தாக்கப்படும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.