கெய்ரோ, மே 7 – எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்ற தவறியதால், அவருக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதனால், ராணுவம் அவரது பதவியை பறித்தது. மேலும் அவருக்குப் பக்கபலமாக நின்ற இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பைச் சார்ந்த ஏராளமானோர், வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்டும், பழி வாங்கப்பட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், இம்மாத இறுதியில் அங்கு நடைபெறும் அதிபர் தேர்தலில் பங்குபெறும் முன்னாள் ராணுவத் தளபதி சிசி, நேற்றுமுன்தினம் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, அளித்துள்ள பேட்டி ஒன்றில், வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வந்த இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் முற்றிலும் ஒடுக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
சிசியின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்லாமிய இயக்கத்தினர், தாங்கள் வன்முறைகளில் இறங்கவில்லை என்றும், அமைதி நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும்,எகிப்தில் முதன்முறையாக, பொதுத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது மோர்சியை, சிசி திட்டமிட்ட சதி மூலம் பதவியிலிருந்து விலக்கியதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மக்கள் மத்தியில், அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள சிசி மீது கூறப்பட்டுள்ள, இந்த குற்றச்சாட்டு நடுநிலையாளர்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.