மே 8 – மாம்பழங்களை விற்பனைக்காக இந்தியாவின் கடைக்காரர் ஒருவர் விரித்து வைத்துள்ள காட்சியைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.
முக்கனிகளில் ஒன்று எனப் போற்றப்படும் மாம்பழங்களின் பருவம் தற்போது இந்தியாவில் தொடங்கி விட்டது.
தரத்திற்காகவும், ருசிக்காகவும் உலகெங்கும் விரும்பப்படும் இந்திய மாம்பழங்கள் பெருமளவில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகிலேயே அதிக அளவில் மாம்பழங்களைப் பயிர் செய்யும் நாடு இந்தியா என வர்ணிக்கப்படுகின்றது.
ஆனால், இந்த முறை, இறக்குமதி செய்யப்பட்ட சில மாம்பழப் பெட்டிகளில் பூச்சிகள் இருந்ததை முன்னிட்டு, இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் அடுத்தாண்டு டிசம்பர் 2015 வரை தடை விதித்ததுள்ளன.
இதனால், இந்தியாவின் மாம்பழ வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகின்றது. அவர்களும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இறக்குமதித் தடையால், ஏற்றுமதி செய்ய முடியாமல் மாம்பழங்கள் இந்தியாவிலேயே முடக்கப்படலாம் என்பதால், உள்நாட்டில் கணிசமான அளவில் விலைகள் குறையும் என்பதோடு, கூடுதலான மாம்பழங்கள் மிஞ்சக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
படம்: EPA